2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சுற்றுலாத்துறையை விருத்தி மூலம் 10 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 30 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுமாயின், கிழக்கு மாகாணத்தில்; 10 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உடனடியாக வழங்க முடியுமென கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரீ.ஜயசிங்கம் தெரிவித்தார்.

விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வுக்; கருத்தரங்கு, கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் இலங்கைத் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கில், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'யுத்தத்துக்குப் பின்னரான இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலுள்ள வளங்களை நுட்பமாகவும் வினைத்திறனுள்ளதாகவும் பயன்படுத்தினால், இந்த மாகாணம் மட்டுமல்லாது நாட்டினதும் அபிவிருத்திக்கு இந்தச் சுற்றுலாத்துறையால் பாரிய பங்களிப்புக் கிடைக்கும்.

சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலம் உடனடியாக 10 ஆயிரம் இளைஞர், யுவதிகள் நேரடியாகவும் அந்த எண்ணிக்கையான குடும்பங்கள் மறைமுகமாக வருமானத்தை ஈட்டமுடியும்' என்றார்.

'சுற்றுலாப் பயணிகள் வெறுமனே இங்குள்ள கட்டடங்களையும் நிலப்பரப்பையும் கடல், காடு மேடுகளையும் கண்டு இரசிக்க வருவதில்லை. கல்வி, விவசாயம், பொருளாதாரம், மருத்துவம், கலை, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் அறிவைப் பெற்றுக்கொள்ளவும்  அவற்றைப் பகிர்ந்துகொள்ளவுமே அவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். அந்தத் துறைகளில்; பங்களிப்புச் செய்யவும் அவர்கள் தயாராகவுள்ளனர். எனவே, இந்த அரியவாய்ப்பை கிழக்கு மாகாணம் நன்கு பயன்படுத்தி அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும்' என்றார்.  

'மேலும், கவலையளிக்கும் விடயமாக கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அறிவும்  வல்லுநர்களும் குறைவாகக் காணப்படுகின்றது. இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

க.பொ.த சாதாரணதரம் கற்றவர் முதல் பட்டதாரிக் கற்கையை முடித்தவர்கள்வரை இந்தச் சுற்றுலாத்துறை வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு முயற்சிக்க முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .