2025 ஜூலை 12, சனிக்கிழமை

தாக்குதலில் ஒருவர் பலி; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 08 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா (வயது 51) என்பவர் நேற்று வியாழக்கிழமை இரவு  கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களினால்  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார்.  

அத்துடன், இவரிடமிருந்து இரண்டரைப் பவுண் தங்கநகையையும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் பறிமுதல் செய்துகொண்டு தப்பிச்சென்றிருந்தனர்.

பாசிக்குடா கடலில் சுற்றுலாப் படகை செலுத்துபவரான இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் இருவர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இவர்கள் மூவரும் நேற்றையதினம் இரவு சிகரெட் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். இதன்போது, கல்குடா -வாழைச்சேனை பிரதான வீதியில் இம்மூவரையும் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.  

இம்மூவரில் ஒருவர் தப்பியோடியதுடன், ஏனைய இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தம்பிப்பிள்ளை பாக்கியராசா என்பவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த மற்றைய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 05 பேரை இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கல்குடாப் பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருணாநாயக்க தலைமையில் கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ;.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேலை செய்துகொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று வெள்ளிக்கிழமை மாலை 03 மணியுடன் வீடுகளிலிருந்து   வெளியேறி; ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும்  என்றும்; மேசன், ஓடாவி வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களின் பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .