2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீர்வாழ் உயிரின வளர்ப்புக் கைத்தொழில் வலயத் திட்டத்தை நிறுத்தவும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படவுள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்புக் கைத்தொழில் வலயத் திட்டத்தை நிறுத்துமாறு கோரி அப்பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.  

நீர்வாழ் உயிரின வளர்ப்புக் கைத்தொழில் வலயத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான கூட்டம்;, வாகரைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் இன்றையதினம் நடைபெறவிருந்தது. இந்தக் கூட்டத்தை நடைபெறவிடாது பிரதேச செயலக கதவைப் பூட்டி வாகரைப் பிரதேச வாவிக்கரையோர பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டம் அமுல்படுத்தப்படும்போது வாகரைப் பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலத்தாவரங்கள் அழியும், களப்புநீர் மாசுபடும், களப்பு மீன்பிடி பாதிக்கப்படும் மற்றும் மீன், நண்டு, இறால் ஆகியவற்றின் இனப்பெருக்கம் தடைப்படும், அயல் பிரதேச நிலங்கள் உவர் தன்மை அடையும், மிருக வளர்ப்பு பாதிக்கப்படும், வாவி நீர்மட்டம் குறையும் உள்ளிட்ட பாதகமான  விடயங்கள் காணப்படுவதன் காரணமாக இத்திட்டத்தை நிறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.  
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மக்களுடன் மற்றும் அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். இந்தத் திட்டத்தை முற்றாகத் தடை செய்யுமாறும் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு,  மறுபரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடப்படும். இது தொடர்பில் மக்கள் சந்திப்புடனான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .