2021 ஜனவரி 20, புதன்கிழமை

மண்முனை மேற்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

வா.கிருஸ்ணா   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்டம், நேற்று (21) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எனினும் தவிசாளருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு, குறித்த வரவு-செலவுதிட்டம் அங்கிகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபையின் 20ஆவது அமர்வு, நேற்று சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவின் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது, 2019ஆம் ஆண்டுக்கான வரவு​- செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் குறித்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளரால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த வரவு-செலவுதிட்டம் தொடர்பான பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்ட நிலையில், புதிய ஜனாதிபதி, பிரதமருக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டபோது, ஒரு வாக்கால், இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது வரவு-செலவு திட்டத்துக்கு எதிராக 10 பேர் வாக்களித்தனர். ஆதரவாக 07 வாக்குகள் அளிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் நடுநிலையாக இருப்பதாக தெரிவித்தார்.

இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் வரவு-செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 07பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர்,

இதனடிப்படையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சபையால், தோற்கடிக்கப்பட்ட நிலையில் தவிசாளருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேசசபை பிரதேசம் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுவதன் காரணமாக கடந்த 19 அமர்வுகளிலும் பிரதேசசபையில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லையெனவும் சபையினால் எந்த வித வேலைத்திட்டங்கள் பூரணமாக முன்னெடுக்கப்படவில்லையெனவும் இங்கு குற்றச்சாட்டுகள் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தமக்கு வேண்டிய பகுதிகளிலேயே அபிவிருத்திகளை மேற்கொண்டதாகவும் அபிவிருத்திசெய்யப்படவேண்டிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .