2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

‘முஸ்லிம்களின் ஒத்துழைப்புத் தேவை’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விடயத்தில், முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்த இடத்தில் அழைப்பு விடுக்கின்றேன்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். 

“முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வில், எங்கள் தாயகமான வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு இருக்கவேண்டுமானால், முஸ்லிம் மக்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. அதற்காக, ‘இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரைக் கொண்டுவருவதற்காக ஆதரவு அளிப்போம்’ என்று தெரிவித்தும், அதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை” எனவும் அவர் கூறினார்.  

கல்முனை கார்மேல பற்றிமா தேசியக் கல்லூரி கிளனி மண்டபத்தில், நேற்று (26) நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் “எமது மக்கள் தீர்க்கதரிசனமாக, ஆயுதம் இல்லாது, மிகத்துல்லியமாக, சதி இல்லாமல், வேறு நாடு தலையிடாமல், ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.  

“இலட்சக்கணக்கான மக்களை, வடக்கு, கிழக்கில் பறிகொடுத்துள்ளோம்” என்றார்.  

“ஓர் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சர்வதேச நாடுகளின் தீர்மானங்கள், ஐ.நா. மனித உரிமையின் தீர்மானங்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைப் பேரவை நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இச்சந்தர்ப்பத்தில், நாங்கள் முக்கியமாக அண்மையில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து, அரசியல் தீர்வு பற்றிச் சொன்னோம். 

“அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கக்கூடிய தன்னாட்சியிலான சமஷ்டி முறையில், பூரணமான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின்படி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தப்படி, 18 ஆண்டுகள் இருந்தது. அது இணைத்தது. அதனை, பிழை என்று உயர் நீதிமன்றம் சொல்லவில்லை. அதனை தமிழர்கள், முஸ்லிம்கள், அவர்களது தாயகமாக வாழ்ந்த இடங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து ஆளவேண்டும். 

“தந்தை செல்வா, 1949 ஆண்டிலே சொன்னார், ‘வடக்கின் பலம், கிழக்கின் பங்களிப்புக்குக் கொடுக்கவேண்டும்’ என்று. தற்போது, வடக்கிலும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது 

“ஒற்றையாட்சியில் அதிகாரத்தினைப் பகிரமுடியாது. அதனால் அரசியல் தீர்வு ஏற்பட்டுவிட முடியாது. சமஷ்டித் தத்துவம் என்ற அடிப்படையில், அதிகாரங்களைப் பகிர்ந்து, வடகிழக்கிலே நாங்களே பயன்படுத்துகின்ற அளவிற்கு அமைதல் வேண்டும் என்று வாதாடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .