2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்: பிரதமர் டி.எம்.ஜயரட்ண

A.P.Mathan   / 2010 நவம்பர் 04 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆதவன்)

நாட்டை இரண்டாக மூன்றாக பிரித்துப்போடும்விதமாக நாம் யாரும் சிந்திக்கக் கூடாது. நமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம், மலே போன்ற இன மக்கள் இருக்கின்றார்கள். நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண மட்டக்களப்பில் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர், ''பிரதேச பேதங்களை உருவாக்க யாரும் முயன்றால் அவர்களையும் திருத்தி நம்முடைய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

உலகத்தில் தினமும் பலர் கொல்லப்படுகிறார்கள், காஸ்மீர், சோமாலியா என எல்லா இடங்களிலும் உயிர்கள் பலியாகிய வணணமே இருக்கின்றன.

இந்த நிலையில் எமது நாடு போன்ற வளர்முக நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, உடைத்துப் போட்டுவிட்டு மேலைநாடுகள் தாம் ராஜாபோல் இருக்கின்றன.

நாம் எல்லோரும் குறைபாடுகள் இருப்பின் நமக்குள் கலந்துரையாடி ஒரு குடும்பம்போல் வாழ்ந்து உலகத்திலே சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்'' என்றார்.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆளுனர் மொஹான் விக்கிரம, அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராஜா, பி.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், எட்வின் கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது இந்து சமய ஒன்றியத்தினர், அறநெறிப் பாடசாலைகளின் பிரதிநிதிகள், ஆலய தர்மகத்தாக்கள், ஆலய மதகுருமார், இந்து சமய பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 87 ஆலயங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் நிதி, காலோலையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .