2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

விகிதாசார தேர்தல் தேவையில்லையென்ற நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

விகிதாசார முறைமைத் தேர்தல் தேவையில்லையென்ற கருத்தை அரசாங்கத்தில் இணைந்தவுடனையே சிறுபான்மையினரான எமது நலனை கருத்திற்கொண்டு மாற்றியுள்ளோம். இல்லையென்றால் நடைபெறவுள்ள இத்தேர்தல் விகிதாசார முறைமை இல்லாத தேர்தலாகவே நடந்திருக்குமென  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஓட்டமாவடி பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எம்பி.எம்.ஹூஸைன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

விகிதாசார முறைமை இல்லாமல் போகுமானால் நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் விமோசனம் முழுமையாக அற்றுப்போகும் நிலையிலிருந்து சிறுபான்மை மக்களைக் காப்பாற்றியுள்ளது முஸ்லிம் காங்கிரஸ்.

நடைபெறவுள்ள  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் இடங்களில் தனித்தும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடும் இடங்களில் இணைந்தும் போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த முடிவு தூரநோக்குள்ள சானக்கியமான முடிவு. அந்த முடிவின் அடிப்படையிலே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நீண்டதொரு பயணத்தை பயணிக்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது என்றார்.  

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு வர்த்தக பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், மாகாணசபை உறுப்பினர்களான எம்.எச்.எஸ்.இஸ்மாயில், முபீன் மற்றும் பிரதேசசபை வேட்பாளர்களும் உரை நிகழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--