2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்களுக்கான நடமாடும் சேவை

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            


(ஜதுசன், ரி.லோஹித்)
'மஹிந்தோதயா' வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் மண்முனை தென் எருவில்பற்று கோட்டக்கல்வி பிரிவுக்கான நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை ஓந்தாச்சிமடம், விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக செயலாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு, மண்முனை தென் எருவில்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மண்முனை தென் எருவில்பற்று கோட்டக்கல்வி பிரிவுக்குட்பட்ட 35 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களின் நன்மை கருதி இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது.

இதன்போது ஆசிரியர்களின் சுயவிபரக்கோவை பூர்த்தி, அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளல், சம்பள உயர்வு, சம்பளமுரண்பாடு, உள்ளீர்ப்பு, பதவி உயர்வு, பதவி உறுதிப்படுத்தல், பாடசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையில் பெருமளவான அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினைப்பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ஒட்டியதான பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவையும் இன்று நடைபெற்றது..

இந்நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொணடார்.

இதன்போது பல்வேறு திணைக்களங்கள் கலந்து கொண்டு பல்வேறுபட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கியது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .