2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. கொழும்பு மாநகரத்துக்கு அடுத்தபடியாக இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும் இரண்டாவது இடமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது என மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட தோல் நோய் வைத்திய நிபுணர் என்.தமிழ்வண்ணன் தெரிவித்தார்.

இவ்வாண்டின் டிசெம்பர் மாத நடுப்பகுதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 புதிய தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டக்களப்பில் 151 தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் அதிகரித்துக் காணப்படும் தொழு நோயைக் கட்டுப்படுத்துவதற்குரிய முயற்சிகளை தொழுநோய்த் தடுப்பு இயக்கம் எடுத்து வருகின்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

'நோயாளிகளை இடம்பெயர் வைத்திய சிகிச்சை முகாம்களிலேயே அடையாளம் காண முடிகின்றது. இப்பொழுது இந்த நோயை நாங்கள் மக்களின் காலடிக்கே சென்று அடையாளம் காணும்; செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அதிகம் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.

இப்பொழுது நாங்கள் முன்கூட்டியே நோயாளிகளை அடையாளம் காணுவதால் இந்த அதிகரிப்பு எதிர்வரும் வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் குறைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அங்கவீனம் ஏற்படக்கூடியளவுக்கு நோயின் தீவிரம் இப்பொழுது இல்லை. காரணம் நோயின் அறிகுறிகளை அவர்கள் அடையாளம் காணுகிறார்கள், ஆனால் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாகவே இருக்கின்றது. பொதுநிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் இதில் இன்னமும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.  இனங்காணப்பட்ட வறிய நோயாளிகளுக்கு உதவி தேவை. அவர்களது நாளாந்த ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. நடுத்தர வயதினரைத்தான் இந்த நோய் அதிகம் பாதிக்கின்றது.' என்றார்.

இது தொடர்பாக மாவட்ட தொழுநோய்த் தடுப்பு பொதுசுகாதாரப் பரிசோதகர் பி. மனோகரன் தெரிவிக்கையில்,

'சனத்தொகை அடிப்படையில் பார்த்தால் அதாவது குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட சனத்தொகையில் கூடிய நோயாளர்கள் என்ற விகிதாசாரப்படி பார்த்தால் மட்டக்களப்புத்தான் முதலிடத்தில் உள்ளது. நோயாளர்களின் கூடிய எண்ணிக்கையின் அடிப்படையில் கணித்தால் கொழும்பு மாநகரம்தான் முதலிடத்திலும் அதற்கடுத்த படியாக மட்டக்களப்பும் உள்ளது.

நோயின் அறிகுறி வெளிப்படையாகத் தெரியவர சுமார் ஆறு வருடங்களாவது செல்லும். ஆயினும் நோய் வெளிப்பட்டு கூடிய பட்சம் ஆறு மாதகாலத்திற்குள்ளாகவாவது சிகிச்சை பெறாவிட்டால் அங்க விகாரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய நோயாளர்கள் வருடாந்தம் 130 - 140 வரை அடையாளம் காணப்படுகின்றார்கள்.

நோயாளிகளையும் அவர்களது சுற்றாடலையும் பரிசோதித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம். கிராமத்தில், ஆசிரியர்கள், மாணவர்களிடத்தில், வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச அலுவலர்களுக்கு விழிப்புணர்வு என்று தருகின்றோம்.  இந்த நோய் துரோகிகளுக்கு, பாபம் செய்தவர்களுக்கு, சாபக்கேடானவர்களுக்கு, சபிக்கப்பட்டவர்களுக்குத்தான் வரும்  என்ற ஒரு கருத்து சமுதாயத்தினரிடையே வேரூன்றி இருந்து வந்துள்ளது. இதனால் தாங்கள் சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப்படலாம் அல்லது இழிவுபடுத்தப்படலாம் என்பதால் இந்த நோயின் குணங்குறிகள் உள்ளவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.  ஆனால் இது இப்பொழுது பக்ரிரீயாவால் தொற்றக்கூடிய ஒரு நோய் என்ற விழிப்புணர்வு மக்களிடம் படிப்படியாக ஏற்பட்டு வருவதால் மக்கள் இந்த நோயாளிகளை ஓரளவு அங்கீகரிக்கின்றனர்.

சாதாரணமாக ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியோ அல்லது மாணவனோ தொழுநோய்க்கான அறிகுறிகள் தன்னிடம் உள்ளதா என தன்னையும் பரிசோதித்து வீட்டிலுள்ளோரையும் சுற்றாடலில் உள்ளோரையும் பரிசோதிக்குமளவுக்கு நாம் விழிப்புணர்வை ஊட்டி வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் செங்கலடியில் இருந்து ஆரையம்பதி வரையுமுள்ள கடலுக்கும் வாவிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையோர சமுதாய மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில்தான்; தொழுநோய் அதிகமாகவுள்ளது.

அத்துடன், கதிரவெளியிலிருந்து கல்லாறு, மண்டூர், கொக்கட்டிச்சோலைவரையும் தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
இந்த ஆண்டில் அதிகமான விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். வலயக்கல்வி, கோட்டக் கல்வி மட்டத்தில் உள்ள விஞ்ஞான ஆசிரியர்களுக்கும் கிராம மக்களுக்கும் 24 விழிப்புணர்வுச் செயற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளன. பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பகுதியினருக்கும் 9 தோல் கிளினிக் கருத்தரங்குகளும் பயிற்சிகளும் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.எப்.றகுமான் , வைத்தியர் காயத்திரி கௌரிபாலன், 14 சுகாதார வைத்திய அதிகாரி; பிரிவுகளில் தொழுநோய் விசேட வைத்திய நிபுணர் என்.தமிழ்வண்ணன் தலைமையிலான வைத்தியர்கள் பாத்திமா ஸபீனா, சுப்சினா சுசில், குளோடியா ரதி உள்ளிட்ட தோல் நோய் வைத்திய நிபுணர் குழுவினர் இந்த வைத்திய முகாம்களை  நடத்தினர்.

சகல தரப்பினரும் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை அடைதல், நோய் பற்றி இருக்கும் மூட நம்பிக்கையை  நீக்குதல், ஆரம்ப நிலையிலேயே நோயை இனமறிந்து சிகிச்சை பெறல், சிகிச்சையை இடைவிடாது பொருத்தமான காலம் வரை பெற்று முழுமையாக குணமடைதல், நோயாளர்களை வைத்தியசேவை பெற ஊக்கப்படுத்தல், இந்த நோய்த் தாக்கத்தால் இன்னுமொருவர் புதிதாக அங்கவீனமடைவதை முற்றாக தடுத்தல், தொடர்ச்சியாக சகல தரப்பினரும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடல், தற்போது சமூகத்தில் உள்ள நோயினால் அங்கவீனமடைந்தவர்களுக்கு உதவுதல், பராமரித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்தே இந்த தொழுநோய் விழிப்புணர்வுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த மூன்று வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக இனங்காணப்பட்ட தொழு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 130 - 140 என்ற மட்டத்திலேயே இருந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல் மற்றும் அதன் மீது முடி உதிர்ந்து காணப்படுதல், கை கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல், தோல் தடித்தும் அதிக மினுமினுப்புடன் காணப்படுதல், உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வியர்க்காமலும் அதே சமயம் உடலின் மற்றப்பகுதிகளில் வியர்வை பெருகியும் காணப்படும், காது மயிர் தடித்திருத்தலும் மற்றும் கண் புருவ மயிர்கள் உதிர்தல், கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை, பாதங்களில் சாம்பல் பூசியது போன்;ற பெரிய வெடிப்பும் காணப்படும், உள்ளங்கையில் சதை மேடுகள் சூம்பியிருக்கும், கைகால் விரல்கள் மடங்கியிருத்தல், குறண்டியிருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல், கண்விழி மூட முடியாமல் கருவிழியிலே புண் இருத்தல், முகத்தில் பாதி செயலிழத்தல், மணிக்கட்டுத் தொங்கி விடுதல், கணுக்கால் செயலிழந்து போதல், ஆறாத உணர்ச்சியற்ற நீண்ட நாட்பட்ட புண், சட்டையில் பொத்தான் போட முடியாமை பேனாவைப் பிடித்து எழுத முடியாமை போன்றன இந்த தொழுநோயின் அறிகுறிகளாகும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புக்களுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கட்டுக்களில் இழப்பு ஏற்படுவதால் இவை விரல்கள் உதிர்ந்தது போலக் காட்சி தரும். இவையே தீவிரமடையும்போது நோயாளி உயிர் துறக்கும் நிலையை அடைவதுமுண்டு' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .