2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை நாடியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிவாரணசேவைகள் பணிப்பாளர் ஆ.லக்கதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த அவர் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, ஏறாவூர்ப்பற்று, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று அங்கு தங்கியுள்ள மக்களின் நலன்கள் தொடர்பில் கேட்டறிந்தார்.

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சமைத்த உணவு வசதிகள் தொடர்பில் மதிப்பீடுசெய்து அவற்றின் குறைபாடுகளை தீர்த்தல் மற்றும் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கண்டறிதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த விஜயம் அமைந்ததாக பணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நலன்புரி முகாம்களை பார்வையிட்டு வருகின்றேன். அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு விஜயம்செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டேன். முகாம்களில் உள்ள மக்களுக்கு சிறந்தமுறையில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதில் எதுவித குறைபாடுகளும் இல்லை.

எனினும் சில பகுதிகளில் வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவந்து நலன்புரிமுகாம்களில் தங்கியிருந்த மக்கள் தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்பட்டன. குறிப்பாக கிராண் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வந்த மக்களுக்கு இந்த பிரச்சினையிருந்தது.

எனினும் பாதிக்கப்பட்டுவரும் மக்களை மக்கள் வரும் பகுதிகளில் உள்ள பிரதேச செயலாளர்கள் கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ளேன். அந்த அடிப்படையில் அந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் ஆபத்தான நிலை குறையும்போது அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படும்போது கிராண் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளேன்.

சமைத்த உணவுகளை வழங்குவதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே கொண்டுள்ளது. அதற்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவையான நிதிகள் அதற்காக வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக தேவைப்படும் நிதிகளும் ஒதுக்கப்படும். அதனைவிட மேலதிக தேவைகளை தீர்க்கும் வகையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் பெறப்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரிச்சினைகள் தொடர்பில் அரசசார்பற்ற நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் அங்கு அந்த தேவைகள் நிவர்த்திக்கப்பட்டன. பிரதேச செயலாளர் உதயசிறிதருடன் அவர்கள் தொடர்பை ஏற்படுத்தி அந்த தேவைகளை நிவர்த்திசெய்தனர்.

தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக தொடர்ச்சியாக தேவைப்படும் அனைத்து தேவைகளையும் நிவர்த்திசெய்து மக்கள் எதுவித பிரச்சினைகளும் இன்றி இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என   இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.இன்பராசா மற்றும் பிரதேச செயலாளர்களும் உடனிருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நிவாரணசேவைகள் பணிப்பாளர் ஆ.லக்கதாஸை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாருக்கு எடுத்துக்கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, ஏறாவூர்ப்பற்று, கிராண், வாழைச்சேனை, வவுணதீவு, பட்டிப்பளை ஆகிய பிரதேச மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே அமைச்சர் 10மில்லியன் வழங்க முன்வந்த நிலையில் முதல் கட்டமாக உடனடியாக மூன்று இலட்சம் ரூபாவை ஒதுக்கீடுசெய்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன் ஏனைய நிதியையும் உடனடியாக வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .