2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

'தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு  சர்வதேச நாடுகள் முன்னின்று உழைக்க வேண்டும் என    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், அதிகாரப்பகிர்வு முயற்சிகள் குறித்து வியாழக்கிழமை (17) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள் பிரேரணை தொடர்பான தீர்மானம் அதிகப்படியான நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை, தமிழ் மக்களுக்கான நிரந்தர அதிகாரப்பகிர்வைப் இலங்கை அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு சர்வதேச நாடுகளுக்கு உண்டு. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள்  முன்னின்று உழைக்கின்றது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் புலம்பெயர் தமிழர்களும் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சிகளும் போராட்டங்களும் வெகுஜன பிரசாரங்களும் மக்களின் எழுச்சிகளும்  வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாக்குரிமை பலத்தின் விளைவுகளும் ஆணைகளும் உலகத்தின் பார்வைகளை ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களுக்கு உலகளாவிய ரீதியில் ஓர் அங்கிகாரத்திற்கான பார்வையை ஏற்படுத்திக்கொடு;த்துள்ளது போல் நீண்டகாலமாக இலங்கை அரசால் மறுக்கப்படுகின்ற      அதிகாரப்பகிர்வை  பெற்றுத்தர முனைய வேண்டும்.
இலங்கை அரசு  ஜி.ஜி.பொன்னம்பலம் கேட்ட ஜம்பதிற்கு ஜம்பது, செல்வா - பண்டா ஒப்பந்தம், சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை, இலங்கை- இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை செய்தபோதும் அதிகாரப்பகிர்வை கடந்த அறுபது ஆண்டுகாலமாக வழங்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளையே தொடர்ந்து கையாண்டு வருகின்றது.  அரசின் இந்த மெத்தனப்போக்கே தமிழர்களின் விரக்தி நிலைக்கும் நம்பிக்கையீனத்துக்கும் காரணமானது.

எனவே, இவைகளை முறியடித்து அதிகாரப்பங்கீட்டை உரியமுறையில் பெறுவதற்கு சர்வதேசத்தின் ஆதரவுடன் முறையான திட்டமிட்ட நல்லிணக்கத்துடனான கருத்துப் பரிமாற்றத்தை   உறுதியான முறையில்   தமிழ் தேசியத் தலைமைகள் முன்னெடுப்பது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை தோற்றுவிக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள்   வட, கிழக்கில் மாவட்ட, மாகாணச் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு செயலாற்றவேண்டும்.
வட மாகாணத்தை பொறுத்தவரையில் தமிழ் அரசியல் தலைமைகளே  தங்கள் பிரதேசத்தின் திட்டமிடலையும் அமுலாக்கலையும்  நடைமுறைப்படுத்துகின்றனர். மேலும், வடமாகாணத் தமிழர்களில்; அநேகமானோர் மேலைத்தேய நாடுகளில் தொழில் புரிவதால் பொருளாதார முதலீடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இராசதந்திரிகளின் பார்வையும் அதிகமாக வடக்கு நோக்கி நகர்ந்துள்ளன. ஆனால் கிழக்கை பொறுத்தவரையில்  தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் மேற்படி விடயங்களுக்கும் எவ்வித வாய்ப்புகளும்  வசதிகளும்  சந்தர்;ப்பங்களும் இல்லை என்பதை எமது தமிழ்த் தேசியத் தலைமைகள் நன்கு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஏனெனில், கிழக்கை பொறுத்தவரையில் கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய இனங்களின் ஆதிக்கத்திற்குள் முடக்கப்படுகின்றனர். இதனால், கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்களையே எதிர்நோக்கி வருகின்றனர்.

கிழக்கு மாகாணசபையில் உள்ள ஒருசில இனவாதிகளினுடாக  தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தெடுக்கின்ற முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

கிழக்கை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வாழ்வியல் அரசியல், கல்வி, உயர் கல்வி, பொருளாதார, தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி, பண்பாட்டு ரீதிகளாக  நலிவடைந்து செல்லும் நிலை திட்டமிட்டு தோற்றுவிக்கபபட்டுள்ளது. எமது நிலங்கள் கூட இன்று பறிபோய் கொண்டிருக்கின்றன.

கிழக்கில்  அண்ணளவாக  39 சதவீதம் தமிழ் மக்களும் 36 சதவீதம் முஸ்லிம் மக்களும்  23 சதவீதம் சிங்கள மக்களும் ஏனையவர்களும் வாழ்கின்றனர். இந்த யதார்த்தை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நிதானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு இருக்கவேண்டும்.

கிழக்கின் யதார்த்;தத்தை புரிந்துகொண்டு இணக்கப்பாட்டுடன் செயல்படவேண்டிய இடத்தில் இணக்கப்பாட்டுடனும் எதிர்த்து நின்று காரியமாற்ற வேண்டிய இடத்தில் எதிர்த்து நின்று காரியமாற்றுவதும் காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.

இதேவேளை, எமது உரிமைகள் தொடர்பாக எந்தவித விட்டுக்கொடுப்புக்களுக்கும் நாம் தயார் இல்லை. இவ்விடயத்தில் அறுபது ஆண்டுகால வலியைச் சுமந்துநிற்பவர்கள் நாம், ஆயுதப் போராட்ட காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோவொரு வகையில் ஈடுகொடுக்க முடியாத இழப்புக்களை சந்தித்து இன்னும் நிர்க்கதி நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவிக்கின்றன.

தமிழ் மக்களின்  அதிகாரப்பகிர்வு  தொடர்பாக தீர்;க்கமான முடிவெடுக்கும் பொறுப்பு இந்தியாவிற்கும் உள்ளது. காரணம் விரும்பியோ, விரும்பாமலோ நிர்ப்பந்தம் காரணமாக  இலங்கை - இந்திய ஒப்பந்தமூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு வட, கிழக்கு மக்கள் அதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தன்  மூலம் வடமாகாணத்தி;ல் ஆளும் தரப்பினராகவும் கிழக்கில் எதிர்த்தரப்பினராகவும் செயல்பட்டு வருகின்றோம். 

மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பெறுவது தொடங்கி சுயநிர்ணய உரிமைகளை பெறுவதுவரைக்கும் எமது அரசியல் போராட்டம் நீண்டுகொண்டே போகும்.

பல முரண்பாடுகளுக்கும் மத்தியில் விரும்பியோ, விரும்பாமலோ வட,கிழக்கை இணைத்து காட்டியது இந்திய அரசு இதை உணர்ந்துகொள்ள வேண்டும், ஆனால், இதை அரசு ரீதியாக பிரித்தது.  ஆயினும், தமிழ் மக்களின்  உரிமைகள் தொடர்பாக  இந்தியா தட்டிக்கழிக்காது சர்வதேசிய ரீதியாக தீர்வொன்றைப் பெற்றுத்தருவதற்கு ஒத்துழைக்க வேண்டிய  கடப்பாடு உண்டு. இந்திய அரசு  எம் இலட்சியங்களை வெற்றியடையச் செய்வதோடு,  அரசின் தவறான செயல்திட்டத்தினை நாம் தோற்கடிக்க எமக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்த தீர்வி;னையே எதிர்பார்த்து நிற்கின்றது. இது மறுக்கப்பட்டபோதுதான் தமிழர்களாகிய நாங்கள் மாற்றுத் தீர்வை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது

இதனால், உலக நாடுகளின்  அவதானிப்பு அவசியம் என உணரப்பட்டதன் விளைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளின் மேற்பார்வையின் கீழ் தீர்வு அவசியம் என்பதில் உறுதியாக நிற்கின்றது. இதற்கு காரணம் இலங்கை அரசின் செயற்பாடே ஆகும்.

எனவே இலங்கை அரசு மாற்றான் தாய்மனப்பான்;மையுடன் தமிழ் மக்களை பார்க்காது இதயசுத்தியுடன் காலம் தாழ்த்தாது நியாயமான தமிழர்களுடைய அபிலாஷைகளையும் உரிமைகளையும் வட, கிழக்கை இணைத்து வழங்கவும் இப்பகுதியில் உள்ள ஏனைய இனங்கள் தொடர்பாகவும் அவர்களுடன் பேசி அவர்களுக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X