2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் அரசியலுக்கு வர தயாராகவேண்டும்: ரவூப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆணாதிக்க யுகத்திலிருந்து பெண்கள் விடுபட்டு, பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருக்கவேண்டும் என்று  நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும்; வடிகாலமைப்புச்சபை  அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மகளிர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு, காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'இந்த நாட்டில் அடுத்தடுத்த தினங்களில் பல அரசியல் யாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதில் பெண்கள் தொடர்பிலும்; பெண்களின் வலுவூட்டல் தொடர்பிலும் பெண்களுக்கு எதிரான அநியாயங்கள், அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவருகின்ற விதத்தில் புதிய அரசாங்கத்தின் ஆலோசனைகளை உள்ளடக்கிய சட்ட சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகிவருகின்றது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்ய வேண்டும்.

அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிக்கவேண்டும் என்றும் இந்த அரசாங்கம் உறுதியான சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த முப்பது வருடங்களாக இயங்குகின்ற அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்தக் கட்சிக்கு பெண்களின் பங்களிப்பு என்ற விடயம் அதிகமானது. எங்களுக்கு வாக்களிப்பில் பெண்கள் காட்டுகின்ற ஆர்வம் கூடுதலாக இருக்கின்றது.

இருந்தாலும், எங்களது அரசியலில் பெண்கள் பங்கெடுத்து அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு துணிவு இல்லாத  ஆணாதிக்க யுகத்திலிருந்து  விடுபட்டு,  பெண்கள் அரசியலுக்கு வந்து மாற்றத்தை கொண்டுவருவதற்காக தயாராக இருக்கின்றோம் என்பதைக் காட்டவேண்டும்.

இனிவரும் உள்ளூராட்சிசபை தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எங்கெங்கெல்லாம் பெண்களை வேட்பாளராக நிறுத்தமுடியுமோ, அங்கெங்கெல்லாம் பெண் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். அவ்வாறு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துகின்றபோது, பெண்களுக்கு பெண்களே வாக்களிக்கும் கலாசாரம் உருவாகும்.

எமது அரசியலில் புதிய பரிமாணத்தை உருவாக்கவேண்டும். பெண்களை தைரியமாக அரசியலில் ஈடுபடவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான அரசியல் இயக்கம் என்பதை இதற்கப்பால் சென்றும் நிரூபிக்கவேண்டும் என்றால், பெண்களின் முழுமையான பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்.

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உச்சபீடத்தில் இரண்டு பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதை காலப்போக்கில் இன்னும் அதிகரிக்கச் செய்யவேண்டும். கட்சிக்குள்ளும் கட்சியினுடைய பிரதிநிதிகள் இருக்கின்ற சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும் என்ற முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவோம்' என்றார்;.

இதன்போது, கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களுக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டதுடன், அல்கிம்மா நிறுவனத்தினால் அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தை  ஊக்குவிக்கும் வகையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களுக்கு இலவச குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X