2021 மே 08, சனிக்கிழமை

'மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதன் அடையாளமாக அமர்வில் கலந்துகொள்ளவில்லை'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

'எனக்கு வாக்களித்த தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதன் அடையாளமாகவே நான் மாகாணசபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை'  இவ்வாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

கடந்த 2 மாதகாலமாக இழுபறி நிலையிலிருந்த கிழக்கு மாகாணசபையில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வில் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (10) மாலை அவரது இல்லத்தில் நடத்திய  ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,  

'தமிழினத்துக்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை தக்கமுறையில் பெற்றுக்கொள்ளவேண்டும்.  அதாவது  ஐனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கதைத்து இலங்கையில் புதிய அரசாங்கத்தை  உருவாக்கியவர்கள் நாங்கள் என்ற அடிப்படையில், எமக்கு உரித்தான இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்று கிழக்குவாழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவேண்டும். அதற்குரிய கைங்கரியங்களை எந்த வகையில் மேற்கொள்ளவேண்டுமோ, அந்த வகையில் மேற்கொள்ளுங்கள் என்று நான் பணிந்துநின்றேன்.

கிழக்கு மாகாண மக்களின் கடந்தகால வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் பெரும்பான்மை இனத்தவரை விட, சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியிலேயே   கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்புகளும் அநியாயங்களும் நடந்தேறியதை உலகு அறியும்.
தமிழ்த் தலைவர்கள் முதலமைச்சர் பதவியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வழிவகை செய்யவேண்டும்.  அதிலும்,  நான் தெரிவித்த  விடயம் என்னவெனில், முதலமைச்சர் தமிழராக இருக்கவேண்டும் அல்லது மூன்று அமைச்சு பதவிகளை பெறவேண்டும். இந்தக் கோரிக்கையை எனக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷைகளுக்காக தமிழ்த் தலைவர்களிடம் நான்  விடுத்திருந்தேன்.

என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது எமது தமிழ் மக்கள்;. அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டிய தேவை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்குள்ளது. மேலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் அன்றும் ஏமாந்தோம். இன்றும் ஏமாந்தோம். மேலும் ஏமாறுவோம் என்ற நிலைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X