2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ஆதரவு பேரணியில் ரகளை: 11 பேர் காயம்

George   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியின் பல பாகங்களிலும் பட்டாசுகள் வெடித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது ஏற்பப்பட்ட குழப்பத்தில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இளைஞர்கள் பலரும் மோட்டார் சைக்கிளில் ஹிஸ்புல்லாஹ்வின் புகைப்படத்தினை தாங்கி ஊர்வலமாக சென்றனர்.

இதனையடுத்து ஏற்பட்ட  ரகளையினால் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அதில் 9 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது,  காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள ஹோட்டலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சிறிய சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதற்ற நிலையை தடுப்பதற்காக மேலதிக பொலிஸார் மற்றும்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் கூறினர்.

இந்த சம்பவத்தின் போது சிலர், காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளதாகவும் இதில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஜமாஅத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .