2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாநகரசபைப் பிரிவில் 60 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மார்ச் மாதம்வரை 66 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் 30 பேரும் கல்லடி பிரதேசத்தில் 10 பேரும் புளியந்தீவு பிரசேத்தில் 10 பேரும் கோட்டமுனை பிரதேசத்தில் 05 பேரும் வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் 04 பேரும் கொக்குவில் பிரதேசத்தில் 04 பேரும் இருதயபுரம் பிரசேத்தில் 02 பேரும் மாமங்கம் பிரதேசத்தில் ஒருவருமாக 66  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு மட்டக்களப்பு மாநகரத்தை டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.  இதில் மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் நாவற்குடா பிரதேசத்தில் 30 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  இப்பிரதேசத்தில் டெங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியுள்ளது.

இதற்காக  திங்கட்கிழமை காலை (31) 07 மணியிலிருந்து பகல் 01.30 மணிவரை பாரிய டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  நாவற்குடா பிரதேசத்தை 08 வலயங்களாக பிரித்து சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வீடுகள், வெற்றுக்காணிகள், பொதுக்கட்டிடங்கள் சுற்றுப்புறச் சூழல்கள் என்பன பரிசோதிக்கப்படும். டெங்கு நுளம்புகள்  பரவக்கூடிய சூழல் காணப்படின் உரியவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டெங்கு நுளம்புகளை பரப்பும் பொருட்கள் காணப்படின் அவைகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  மாநகரசபை ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் மேற்படி பிரசேத்திலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒவ்வொரு படிவம் போடப்படுமெனவும் அவர் கூறினார்.

நாவற்குடா பிரதேசத்தில் வீடுகள், காணிகள் பரிசோதிக்கப்படும்போது, வீட்டு உரிமையாளரோ அல்லது பொறுப்பு வாய்ந்த ஒருவரோ பிரசன்னமாகியிருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .