2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்

Johnsan Bastiampillai   / 2020 நவம்பர் 26 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி. யுதாஜித்

போரிலே கொல்லப்பட்ட வீரர்கள், அஞ்சலிக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருதரப்பினராலும் அங்கிகரிக்கப்படுவதே நாகரிகமடைந்த எல்லா உலக நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது. இந்த அடிப்படையில் மாவீரர் தினத்துக்கான அஞ்சலி நிகழ்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பிலான தடைவிதிப்பு விடயங்கள் குறித்து கருத்து வெளியிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் சித்தாந்த ரீதியான ஒரு போராட்டமல்ல. அதாவது, ஆட்சியைக் கவிழ்த்து பொதுவுடமை அல்லது சோசலிச அரசை உருவாக்குகின்ற நோக்கம் கொண்டதல்ல. மாறாக, குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தின் இறுதியில் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்த தமது உரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டமே ஆகும். இவ்வகையில் இது உரிமைப் போராட்டமாகும்.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை பண்டாரநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரையிலான அவ்வப்போதைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அரசியல் தீர்வுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை செயலுருப் படுத்தும் தருவாயில் பல்வேறு காரணங்களால் நின்று போயின. ஆக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என்பது, இலங்கை அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.
அனுசரணை வழங்கிய நாடுகளின் உதவிகளோடு அவ்வப்போது ஆட்சி பீடம் ஏறிய இலங்கை அரசுகள், போராளிகளோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. இது அவர்களுடைய போராட்டத்தை, இலங்கை அரசும் அனுசரணை வழங்கிய நாடுகளும் ஏற்றுக் கொண்டன என்பதன் வெளிப்படை அம்சமாகும்.
இத்தகைய நடைமுறைகளின் வெளிப்பாடாகச் சமாதானப்பேச்சுவார்த்தைகள் நிகழாத காலங்களில், சண்டைகள் நடைபெற்ற பொழுதும்கூட, பல சந்தர்ப்பங்களில் போரில் கொல்லப்பட்ட இரண்டு பக்க வீரர்களும் பரிமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது பயங்கரவாதிகள் என்று அரசினால் வர்ணிக்கப்பட்ட  போராளிகள், அதே போராளி, இயக்கத்துக்கு குறிப்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டனர். இதன் மறுதலையாக ஆக்கிரமிப்பபுப் படை என்று போராளிகளால் நாமமிடப்பட்ட கொல்லப்பட்ட இராணுவத்தினர் இராணுவத்திற்குக் கைமாற்றப்பட்டார்கள்.

இந்த நிகழ்வின் வெளிப்பாடு என்ன? போரிலே கொல்லப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளாகவோ ஆக்கிரமிப்புப் படையாகவோ கொள்ளப்படவில்லை. அவர்கள் இரு பக்கத்தினராலும் அங்கிகரிக்கப்பட்ட வீரர்களாகவே மதிக்கப்பட்டனர். கைமாற்றம் செய்யப்பட்ட இந்த வீரர்கள் கண்ணியத்துக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதோடு அவர்கள் கௌரவமான அஞ்சலியைப் பெறுவதை இரு பக்கத்தினரும் ஏற்றுக் கொண்டார்கள். நாகரிகமடைந்த எல்லா உலக நாடுகளிலும் இதுவே நடைமுறையாக உள்ளது.

இந்த வகையிலே கொல்லப்பட்ட போராளிகள் என்போர், கண்ணியத்துக்கும் மரியாதை செலுத்துவதற்கும் உரியவர்களாவர். போர் நடைமுறைகளில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு நாகரிகச் செயற்பாடாகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வகையில், ஈழப் போரில் ஈடுபட்ட மாவீரர்களின் அஞ்சலி என்பது, அங்கிகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை என்பதையும் நாகரிக உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை என்பதனையும் அரசு மறுக்க முடியாது.

இப்பொழுது போர் ஒழிந்துவிட்டது. போர் ஒழிந்தாலும் போரிலே உயிர்த்தியாகம் செய்த இரு பக்க வீரர்களுக்குமான அஞ்சலியை இரு பக்கத்தினரும் தொடர்ந்து செய்ய வேண்டியது, நாகரிக உலகின் ஒரு விழுமியமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இனி, ஏன் குறித்த இந்த நாளில் அதனைச் செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை நோக்கலாம். விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இருக்கும் காலத்தில், கண்ணியத்துக்குரிய இந்த வீரர்களுக்கான அஞ்சலியை அவர்கள் ஒரு குறித்த நாளில் செய்து வந்தார்கள். அப்பொழுது வீரர்களின் உறவினர்களும் பொது மக்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

இப்பொழுது விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இல்லை. கொல்லப்பட்ட வீரர்களின் உறவினர்களும் பொது மக்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அந்தச் செயற்பாட்டை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிப்பதே நாகரிகமான ஒரு விழுமியமாகும். இயக்கம் தடை செய்யப்பட்ட போதிலும் கொல்லப்பட்ட வீரர்களுக்கான அஞ்சலி என்பது தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல என்பதை மேலே கண்டுள்ளோம். ஆகவே இந்த மாவீரர்களை தடை செய்யப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் என்று முத்திரை குத்துவது பொருத்தமல்ல.
தற்போது விடுதலைப்புலிப் போராளிகள் என்று யாரும் இல்லை. போரில் உயிர் தப்பிய எல்லாப் போராளிகளும் அவரவர் குடும்பத்தோடு சேர்ந்து அந்தந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களது குடும்பங்களோடு சேர்ந்து வாழும் உரிமையை அரசு மறுக்குமா? அவ்வாறு மறுப்பது நாகரிகமா?
ஆக, எவ்வாறு போராளிகளாக இருந்து சமூக வாழ்வுக்குள் இரண்டறக் கலந்து விட்ட முன்னாள் போராளிகள் சமூக அங்கத்தவர்களாகக் கருதப்படுகின்றார்களோ, அதே போன்றே மாவீரர்களும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற நாமத்துக்குள் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்களாகின்றார்கள்.

இந்த வகையில் அவர்களுக்கான அஞ்சலியை, மரியாதையை, வணக்கத்தை செலுத்துவதை அரசு தடை செய்யக்கூடாது. நாகரிக உலகின் இந்த நல்ல செயற்பாட்டை படை வீரர்களுக்கும் சிங்களப் பொது மக்களுக்கும் விளக்கிச் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
நாடு அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளமடைவதற்கு மக்களின் ஒற்றுமை அவசியம் என்பதை அரசு ஏற்றுக் கொள்ளும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளுவதெனில், மேற் கூறப்பட்ட நியாயப்படுத்தல்களின் அடிப்படையில் மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்துவதை ஒரு பிரச்சினையான விடயமாக எடுத்துக் கொள்ளாது, தமிழ் மக்களின் தார்மீகக் கடமையை செய்வதற்கான அனுமதியை வழங்காவிட்டாலும் அது தொடர்பில் முரண் நடவடிக்கைகளில் ஈடுபடாது கண்டும் காணாமல் இருப்பது இந்த நாட்டின் எதிர்கால சுமூக நிலைக்கு வழிவகுக்கும் ஒரு செயற்பாடாக அமையும். 

இந்த விடயத்தை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் கவனத்திற் கொண்டு செயற்படுவது இலங்கைத் தேசிய கீதத்தில் குறிப்பிடப்படும் '~நாமெலாம் ஒரு கருணை அனை பயந்த எழில் கொள் சேய்கள் எனவே இயல்புறு பிளவுகள் தமைஅறவே இழிதென நீக்கிடுவோம்" என்ற வாசகங்களுக்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும் செயற்பாடாய் அமையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .