2021 மார்ச் 06, சனிக்கிழமை

மேச்சல் தரை அபகரிப்பு; பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், வ.சக்தி

மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை காணிகள் அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காடுகள் அழிக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென் மேற்கு கால்நடை உற்பத்தி பாற்பண்ணை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.

மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை)பிரதேச சபைக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி, மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று, அங்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர், பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸிடம் வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கால்நடை பண்ணையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை, அரச காணியாக விடுவித்து தருமாறு கோரி பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் 2,008 ஹெக்டெயர் காணிகள் மேய்ச்சல் தரைக்காக கேட்டு அனுப்பியிருந்ததாகவும் அதனை வனபரிபாலன திணைக்களம் பிரதேச செயலகத்துக்கு வழங்கும்போதுதான் இதற்கான தீர்வை வழங்கமுடியும் என பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலையில், அந்த காணி விடுவித்து வழங்கப்படவில்லையெனவும் இது தொடர்பில் உரிய திணைக்களத்துக்கும் மாவட்டச் செயலாளருக்கும் குறித்த கோரிக்கையை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .