2024 மே 03, வெள்ளிக்கிழமை

‘வட, கிழக்கு சுவீகரிப்பைத் தடுப்பதற்கு த.தே.கூவுக்கே வல்லமையுள்ளது’

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்தான் இருப்பதாக, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

பல தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைப்பதற்க்காக அரசாங்கத்தால் களமிறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாக, தமது அரசியல் பணிமணையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும் போது, அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்துக்கு தொல்பொருள் என்ற போர்வையில் இராணுவத்தையும் பௌத்த குருமார்களையும் கொண்டதாக ஒரு ஜனாதிபதி செயலணியை அமைத்து, மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

“அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது, வடக்கு, கிழக்கு சுவீகரிப்பதற்க்காக மேற்கொள்கின்ற அத்தனை நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்தான் இருக்கிறது.

“தமிழ் மக்களின் கட்சிகள் என்ற போர்வையில் களமிறங்கியுள்ள கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தின் பின்னணியில் செயல்படுபவை. அவர்களால் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்து வெளியிடமுடியாது. தங்களது பதவிகளைப் பாதுகாப்பதில் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

“ஆகவே, அவர்களால் தமிழ் மக்களுக்கு விரோதமாக உருவாக்கப்படுகின்ற செயல் திட்டங்களை முறியடிக்க முடியாது. முறியடிக்கக் கூடிய அத்தனை வல்லமையும் தமிழ்த் தேசிய கூட்டப்புக்கு மாத்திரமே உள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .