2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

திண்மக்கழிவு கொட்ட நிபந்தனையுடன் அனுமதி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் திண்மக்கழிவு கொட்டுவதற்கு காத்தான்குடி நகரசபைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டு, அப்பகுதியில் நிபந்தனையுடன் காத்தான்குடி நகரசபை திண்மக்கழிவு கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (14)  அனுமதி வழங்கியுள்ளது.

காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் காத்தான்குடி நகரசபை கொட்டும் திண்மக்கழிவால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன்,  சூழல் மாசடைவதாகவும் கூறி அப்பகுதி பொதுமக்களில் 23 பேர் கையொப்பமிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இம்முறைப்பாடு  தொடர்பில் கடந்த 9.10.2014 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு காத்தான்குடி பொலிஸார் கொண்டுசென்றனர். இதன்போது, அப்பகுதியில் காத்தான்குடி நகரசபை திண்மக்கழிவு கொட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு  பிறப்பித்தது.

இந்த இடைக்கால தடை உத்தரவை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ் பிறப்பித்தார்.

இந்த நிலையில்,  நேற்று செவ்வாய்க்கிழமை இந்த இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் காத்தான்குடி நகரசபையானது சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடாக மனுவொன்றை  நீதிமன்றத்தில்  சமர்ப்பித்தது. அத்தோடு, காத்தான்குடி சுகாதார அலுவலகத்தால் இது தொடர்பான அறிக்கையொன்றும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இவற்றை ஆராய்ந்த நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ், குறித்;த பகுதியில் திண்மக்கழிவு கொட்டுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதகமில்லாமல் திண்மக்கழிவை கொட்டுவதுடன், வாவியினுள் திண்மக்கழிவை கொட்டாமல் கரையோரத்தில் திண்மக்கழிவை கொட்டியவுடன் மண் போட்டு அதை மூடுமாறும் இவற்றை காத்தான்குடி சுகாதார அலுவலகம் கண்காணிப்புச் செய்ய வேண்டுமெனவும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சுற்றாடல் மத்திய அதிகார சபையின் மட்டக்களப்பு உத்தியோகஸ்தர்கள் இதை பார்வையிட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிவான் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, காத்தான்குடி பொலிஸார் இந்த இடத்தில் பொதுமக்கள் திண்மக்கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் நீதிவான் கேட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு 11.11.2014ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவை அடுத்து கடந்த ஒருவாரமாக காத்தான்குடி நகரசபையினால் திண்மக்கிழவுகள் காத்தான்குடி நகரசபை பிரிவில் சேகரிக்காமல் இருந்ததுடன், நீதிமன்றம் நேற்றையதினம் (14) இந்த இடைக்கால தடை உத்தரவை தளர்த்தி நிபந்தனையுடன் கூடிய வகையில் கொட்டுவதற்கான அனுமதி வழங்கியதையடுத்து இன்று புதன்கிழமை (15) தொடக்கம் திண்மக்கழிவுகள் வீடுகளில் இருந்து காத்தான்குடி நகர சபையினால் சேகரிக்கப்பட்டு வருவதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .