2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கொடுப்பனவுகள் வழங்கப்படாமையால் தொழிலாளர்கள் அவதி

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் எல்கடுவ பிளான்டேசன் ஆகிய பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கைநிதி மற்றும் சேவைக்காலப்பணம் என்பன, இதுவரை வழங்கப்படாமையால், தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.   

இவ்விடயத்தை, இ.தொ.காவின் உபதலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, தொழிலுறவுகள் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.  

தேசிய தொழில் ஆலோசனை சபையின் மாதாந்தக் கூட்டம், புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, தொழிலுறவு இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.  
இங்கு மேலும் கூறிய அவர்,   

“தோட்டங்களில் தொழில்புரிந்துவிட்டு ஓய்வுபெற்றுச் செல்லும் தொழிலாளர்கள், ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை பெறாமலேயே, மரணித்த சம்பவங்களும் உள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்கள், உரிய காலத்தில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை, தொழிலுறவு அமைச்சு மேற்கொள்ளல் வேண்டும்.  

பெருந்தோட்டங்கள், தொழிலாளர்களுக்கு எவ்வாறான நிலுவைப் பணத்தைச் செலுத்தி இருக்கின்றன என்பது தொடர்பில், தொழிலுறவு அமைச்சு, தொழில் தேசிய சபையின் ஒவ்வொருக் கூட்டத்திலும், தொழிற்சங்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .