2021 மே 18, செவ்வாய்க்கிழமை

திட்டங்களை வகுக்கும் போது கலாசார, பண்பாட்டு விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

Sudharshini   / 2015 நவம்பர் 24 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

கல்வித் திணைக்களங்கள்; வருடாந்தம் திட்டங்களை வகுக்கும்போது அனைத்து இன,மதங்களின் கலாசார, பண்பாட்டு விடயங்களையும் கருத்திற்கொண்டு திட்டங்களை வகுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்லின சமூகம் வாழும் இலங்கையில் சகல இன, மதங்களினதும் கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.  இருப்பினும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்துக்களின் கலாசாரங்களை இழிவுப்படுத்தும் முகமாக சில செயற்பாடுகள் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வருந்தத்தக்க செயலெனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   

இலங்கையில்  வடக்கு, கிழக்கு மாகாணங்களை தவிர இவ்விரு மாகாணங்களிலும்  தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி விழாவானது தமிழ் பாடசாலைகளில்  விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்வருடம் அவ்விழாவானது ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை நடைபெற்றது. ஒக்டோபர்  13ஆம் திகதி அதிபர்களுக்கான கூட்டமொன்று, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்டு கண்டியில் நடைபெற்றது.

அன்றைய நாளில் பாடசாலைகளில் கும்பம் வைத்தல் இடம்பெற்றதால் சில அதிபர்கள் மேற்படி கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை.

மேலும், தரம் 11 இற்கு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மத்திய மாகாண பாடசாலைகளில் உதவிக் கருத்தரங்கு தொடர்பான பரீட்சைகள் (யுடுஊ) நடைபெற்றமையினால் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வில் மாணவர்களுக்கு முழுமையாக பங்கேற்க முடியாது போனது.

அதேவேளை, நவம்பர் 9 ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் மத்திய மாகாண திணைக்களத்தால் நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெற்றது. இதனால் 9 ஆம் திகதி, தரம் 11 மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை.

இவ்விடயங்கள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனிடம் வினவியபோது, விழாக்கள் வருடந்தோறும் குறித்த தினங்களில்  வருவதில்லையென்றும்  ஆனால், கல்வித் திணைக்களத்தினால்  வகுக்கப்படும்; திட்டங்கள்  உரிய தினத்தில்  செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

கல்வித் திணைக்களம்,  வருடாந்தம் திட்டங்கள் வகுக்கும்போது தமிழ்க் கல்வி அதிகாரிகளோடு கலந்துரையாடி முடிவெடுப்பதில்லையா? அல்லது தமிழ்க் கல்வி அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயற்படுகின்றனரா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் இந்து சமய கலாசாரத்தை அவமதிப்பதாகவே தெரிகிறது. மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திலும் கல்வி அமைச்சிலும் தமிழ்க் கல்வி அதிகாரிகள் இருந்தும் இவ்வாறு நடப்பது துரதிஷ்டமானது' என குற்றம்சாட்டப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .