2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை தவறாக வழிநடத்துக்கின்றன

Sudharshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர்களே வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை ஏமாற்றும் வகையில் காணிகளை பிரித்துக் கொடுத்து, தவறாக வழிநடத்தி வருகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தோட்ட கம்பனிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இதுவரையில் கைச்சாத்திடப்படாத நிலையில், ஒரு சில பெருந்தோட்ட கம்பனிகள் மிகவும் சூட்சுமமான முறையில் தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனை ஒரு சில தோட்ட நிறுவாகங்கள் பயன்படுத்திக் கொண்டு தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றிவருகின்றன. இதற்கு ஒரு சில தொழிற்சங்கங்களும் உடந்தையாக செயற்பட்டு வருகின்றன.

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை அழைத்து, 'இனிமேல் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது. ஆகவே, உங்களுடைய நாள் சம்பளம் அதிகரிக்கப்படகூடிய நிலை இல்லை. எனவே, நாங்கள் உங்களுக்கு ஓர் ஏக்கர் தேயிலைத் தோட்டத்தைப் பிரித்துத் தருகின்றோம். அதனை நீங்கள் பராமரித்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கே சொந்தமானது' என கூறுகின்றார்கள். அது ஒரு நாளும் நமக்குச் சொந்தமாகாது. இது வெறும் கண்துடைப்பே.

தனி வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தோட்டங்களில் 7 பேச் காணியை பெற்றுக் கொள்ள முடியாத இந்த நிலையில், எவ்வாறு இவர்கள் இந்த காணிக்கு சொந்தக்காரர்களாக மாற முடியும்?

அதில், எடுக்கப்படுகின்ற கொழுந்தை நாங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றோம். தொழிலாளர்கள்; இளைப்பாறும் பொழுது பெற்றுக் கொடுக்கப்படும் 14 நாளுக்கான பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருகின்றோம் என தோட்ட தொழிலாளர்களை ஆசை காட்டி, அவர்களை இந்த திட்டத்துக்கு சம்மதிக்கவைத்து அதனை தற்பொழுது இராகலை பகுதியில் ஒரு தோட்டத்தில் நடைமுறைபடுத்தியும் உள்ளனர்.

இந்த வார்த்தைகளை கேட்டு மயங்கிய ஒரு சில தோட்ட தொழிலாளர்கள், தமது சேவைக் கால நிதியான 14 நாள் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.அப்படி பெற்றுக் கொண்டவர்களுக்கு இனிமேல் தோட்டத்தில் எந்தவிதமான பயனும் கிடைக்காது.

இந்த திட்டத்தின் மூலமாக தொழிலாளர்கள் சாதாரணமாக அன்றாட தொழிலாளர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். இதன் மூலம் கடந்த பல வருடங்களாக தோட்டத்தில் கிடைத்து வந்த சலுகைகள் எதனையும் இவர்கள் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் இல்லை.

இது தவிர இதுவரை காலமும் தொழிலார்களுக்கு கிடைத்த ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, பிரசவ சகாய நிதியுடன் கூடிய மூன்ற மாத சம்பளம், ஒய்வூதிய சேவைக்கால நிதி, மரண சகாய நிதி போன்ற எந்தவிதமான கொடுப்பனவுகளும் தொழிலாளர்களுக்கு கிடைக்காது.

மேலும், வரட்சி காலங்களில் சரியாக கொழுந்து பறிக்க முடியாத ஒரு நிலை ஏற்படுவதால் இவர்களின் வருமானம் கேள்விக்குறியாக மாறிவிடும். அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எமது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். இப்படி பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தொழிலாளர்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எதிர்காலத்தில் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்களும் பலம் இழந்து போய்விடும்.

இதனால், தொழிலாளர்களின் உரிமைகள் மொத்தமாக பாதிக்கப்படும். இந்த விடயம் தொடர்பாக நான் தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .