2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

’பெருந்தோட்டங்களில் இனவாதத் தாக்குதல்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

 

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில், இனத்துவ ரீதியான வசைப் பாடல்களும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு, ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலில், பிரதேச எல்லைகளைக் கடந்த தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு என்பது, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீதான கடந்தகால அபிப்பிராயங்களின்  விமர்சனத்தின் வெளிப்பாடு என்றும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய  கடப்பாடு, புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அவருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்.

“பதவியேற்பு உரையில், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்காமைக்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், சிறுபான்மை இனத்தவரை, தன்னுடன் இணைந்துப் பயணிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பு, சாதாரணமானதாக அல்லாது, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளின் ஊடாகவே சாத்தியப்படும்” என்றார்.

“ஜனாதிபதி பதவி ஏற்றபின் பின்னர், மலையகப் பகுதிகளில் தமிழ்மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். கேகாலை, பதுளை மாவட்டங்களில், இத்தகைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வாக்களிப்பது அவரவர் உரிமை. எனினும் அதனைச் சுட்டிக்காட்டி தாக்குதல் நடத்துவது, தொழில்செய்ய விடாது அச்சுறுத்துவது என்பவை, மனித உரிமை மீறல்கள் ஆகும்” என்றார்.

நாட்டின் ஜனாதிபதி என்கிற முறையில், உடனடியாகத் தலையிட்டு இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, தனது அழைப்பை அர்த்தமுள்ளதாக்க ஜனாதிபதி கோட்டாபய முன்வரவேண்டும். அவர் மாத்திரமன்றி, அவரது பின்னால் அணி திரண்ட தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், இந்த விடயத்தில் வாய்மூடி மௌனிகளாக அல்லாமல் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் சென்று பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைக் கொண்டுள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .