2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மக்களுக்கு சேவையாற்ற அமைச்சுப்பதவி தேவையில்லை: அரவிந்தகுமார்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாடாளுமன்றத்துக்கு சென்றதே போதுமானது. அதற்கு அமைச்சுப் பதவியோ அல்லது பிரதி அமைச்சுப் பதவியோ தேவையில்லை. நான், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு ஆற்றும் சேவை ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அமையும்;' என ஐக்கிய தேசியக் கட்சியின்சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

'நாடாளுமன்றம் என்பது இந்நாட்டை ஆளும் சபையாகும். இச்சபைக்கு தெரிவாகியிருப்பதே, நான் செய்த பாக்கியமாகும். இந்நாட்டில் இரண்டு கோடியே இருபத்தைந்து இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றபோதிலும் அவர்களில் சல்லடை போட்டு சலித்து எடுக்கப்பட்ட 225 பேரே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். அவர்களில் ஒருவராக, நானிருப்பது எனக்கு கிடைத்த பேரங்கிகாரமாகும்' என்றும் அவர் கூறினார்.

பதுளையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'பிரதி அமைச்சோ, அமைச்சோ கிடைக்குமானால் அதன்மூலம், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே  எமது சமூகத்துக்காக ஆற்ற முடியும். ஆனால்,  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளைவிட  கூடுதலான சேவைகளை மேற்கொள்ள முடியும். அதனை எவ்வகையில் மேறகொள்வதென்பது எனக்குத் தெரியும்' என்றார்.

'நாடாளுமன்ற தேர்தலில், பதுளை மாவட்டம் சார்பாக போட்டியிட முன்வந்த வேளையில், நான் பிரதேச சபை உறுப்பினராகக்கூட இருக்கவில்லை. எவ்வித அரசியல் அங்கிகாரமுன்றி தேர்தலில்; களமிறங்கினேன். எமது மக்கள் சமூக அங்கிகாரத்தை வழங்கி, என்னை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள எனது புதல்வனின் முயற்சியினால், நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வியை மேற்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளில் 180 பேருக்கு மானிய நிதி உதவிகளை வழங்க என்னால் முடிந்திருக்கின்றது. வறுமை நிலையை மட்டுமே முன்னிலைப்படுத்தி இவர்களை தெரிவு செய்தேன்.    

இவ்வாறான சேவைகள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் மென்மேலும் அதிகரிக்கப்படும். அத்துடன் எமது மக்களின் தேவைகள், அபிலாசைகள், விருப்புக்கள் ஆகியவற்றுக்கமைய, அவைகளை நிவர்த்தி செய்து, எமது மக்கள் தங்கி வாழும் நிலையை மாற்றி, தலை நிமிர்ந்து, சுயமாக வாழ வழிசமைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

எனது வெற்றிக்கு பாடுபட்டுழைத்த அனைவருக்கும் மீண்டும் மீண்டும் எனது உணர்வுபூ10ர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .