2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மலையக தலமைகளுக்கு கொழும்பிலும் நுவரெலயாவிலும் சொகுசு வீடுகள்

Kogilavani   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமச்சந்திரன்

மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களின் பிள்ளைகள், வெளிநாடுகளில் கல்வி பயில்கின்றனர். ஆனால், மலையக மக்களின் பிள்ளைகள் நகர்புறங்களிலும் பங்களாக்களிலும் தொழில்புரிந்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்' என்று ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார
திஸாநாயக்க கூறினார்.

'மஹிந்தவின் மூத்த மகன் இங்கிலாந்திலும், சிறிய மகன் ரஷ்யாவிலும் கல்வி கற்றனர்;. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் இங்கிலாந்திலும், எஸ்.பி.திஸாநாயக்கவின் பிள்ளை இங்கிலாந்திலும் கல்வி கற்கின்றனர். ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பிலுள்ள ஹோட்டல்களிலும்  பங்களாக்களிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்' என்று கூறிய அவர், 'மலையக தலைவர்கள் கொழும்பிலும் நுவரெலியாவிலும் சொகுசு வீடுகளில் வாழ்கையை நடத்துகின்றனர். ஆனால், மலையக மக்கள் எவ்வித அடிப்படை வசிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர்'  என்றும் சுட்டிக்காட்டினார்.

ஹட்டன், எபோட்சிலி தோட்டத்தில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'தோட்டத் தொழிலாளர்கள் வீடுகள் இன்றியும், மலசலகூட வசதிகள் இன்றியும்; வாழ்ந்து வருகின்றனர். ஆனால்,  இவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தலைவர்கள், கொழும்பில் ஒரு வீடு, குளிராக இருக்க நுவரெலியாவில் ஒரு வீடு, காற்று வாங்குவதற்கு கடற்கரையில் ஒரு வீடு என வாழ்ந்து வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களில் 5 வயதுக்குக் குறைவான பிள்ளைகளில் 100 வீதமானோர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014 டிசெம்பர் மாதம் உணவுக்காக மட்டும் 1,000 இலட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். தொழிலாளர்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்து செலவு செய்யும் பணத்தை அவர், ஒரு மாதத்தில் செலவு செய்துள்ளார்.

பாடசாலையை பொறுத்த வரையில், இம்மாவட்டத்தில்  தளபாட வசதிகள் இல்லை, 8 பாடங்கள் கொண்ட பாட விதானத்தில் தினமும் மூன்று பாடங்களே கற்பிக்கப்படுகின்றன, ஆசிரியர்கள் இருந்தும் முறையாக கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இம்மாவட்டத்தில் கடந்த  வருடம் க.பொ.த (சாஃத) பரீட்சையில் நூற்றுக்கு நான்கு வீதமான மாணவர்களே சிறந்த சித்தியைப் பெற்றனர். இந்த நிலைமை கிராம பகுதிகளிலும் உண்டு. ஆனால், நீங்கள் வாக்களித்த அமைச்சர்கள், அவர்களின் பிள்ளைகளை வெளிநாட்டு பாடசாலைகளில் கல்விப் பயில அனுப்புகின்றனர்.

'இந்த நாட்டில் குறைந்த வருமானத்தை பெறுகின்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. வருமானம் இல்லாத வாழ்க்கை தேவை தானா? இதற்காகவா வாக்களித்தீர்கள்?  10 கிலோ மீற்றர் செல்ல பிரதமர் 300 இலட்சத்துக்கு இரண்டு கார்களை வாங்கியுள்ளார்.  

இந்த அரசியல் நமக்கு தேவையில்லை. மாற்று நடவடிக்கை கொண்டு வர வேண்டும். இதற்காகவே, ஜே.வி.பி, மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .