2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தோட்டப்பகுதி பெண்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் : திகாம்பரம் எம்.பி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பெண் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய பெண்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.


தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் பணிமனையில் நடைபெற்ற பெருந்தோட்டப்பகுதி யுவதிகள் மற்றும் பெண்தொழிலாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு அவர்; கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததால் தோட்டத்தொழிலாளர்கள்  இன்று பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இவர்களில் பெருந்தோட்டத் தொழிற்துறைக்குப் பாரிய பங்களிப்புச்செய்கின்ற பெண்தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலுள்ளனர். தொழிற்சங்கங்களில் பெண் தொழிலாளர்களின் அங்கத்துவமே அதிகமாகவுள்ளபோதும் இந்தத் தொழிற்சங்கங்களில் உயர் பதவிகளில்  பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தாகவேவுள்ளது. தொழிற்சங்கங்களின் முக்கிய பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளது. அத்துடன் அரசியற் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளது.


எனவே, பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால் அரசியற்தொழிற்சங்க அமைப்புக்களிலும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பெண்தொழிலாளர்கள் மற்றும் ஏனைய பெண்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். இதனைக் கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவைக்கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் மகளிர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்தக்குழுக்களின் ஊடாக பெண்களின் அபிப்பிராயங்கள் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு உரிய தீர்வினை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தொழில் வாய்ப்பற்ற யுவதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்த யுவதிகள் அனைவருக்கும் அரசாங்க தொழிலைப் பெற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் உரிய கல்வித் தகைமைகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புக்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். எனவே பாடசாலை கல்வியைக் கற்று வெளியேறுகின்ற யுவதிகள் தொழில் உலகத்திற்கேற்றவாறு தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் பெண்தொழிலாளர்கள் தமக்கான தொழில் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் விழிப்புடன் செயற்படவேண்டும் என்றார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் திருமதி வைலட்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப்; உபதலைவர் புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--