2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பொருட்களை பதுக்கியவர்களே மலையக சமூகத்துக்கு துரோகமிளைத்தவர்கள்

Kogilavani   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய பொருட்களைத் தொண்டமான் பவுண்டேசன் என்ற பெயரில் றம்பொடை கலாசார மண்டபத்திலும் நோர்வூட் விளையாட்டு மைதானத்திலும் பதுக்கி வைத்து மலையக சமூகத்துக்கு அப்பட்டமான துரோகமிழைத்தவர்கள் யார் என்பதை மலையகத்தமிழ் மக்கள் உணர்ந்துள்ள இந்த நிலையில் தமது அரசியல் பிழைப்புக்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பற்றி அறிக்கை விடுவது நகைப்புக்குரிய விடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன்  தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களில் இருந்து கொண்டு இ.தொ.காவை கடுமையாக  விமர்சித்து அறிக்கைகள் விட்டு அதன் பின்பு பதவிக்காக இ.தொ.கா வின் காலடியில் தஞ்சமடைந்துள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் இ.தொ.கா வின் நீண்ட வரலாறு குறித்துப் பேசுவது கோமாளித்தனமாகும்.


இ.தொ.காவுக்கு விசுவாசமானவர்கள் யார் என்பதை அந்த அமைப்பு தெரிந்து கொண்டு யாரை எங்கு வைப்பதென்ற பாணியில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிரதான பாதைகளில் உட்கார்ந்து போலியான போராட்டங்களை நடத்தக் கூடிய கடை நிலைக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தள்ளப்பட்டுள்ளார் என்பதை அனைவரும் அறிந்த விடயமாகும்.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் ஊடாக மலையகத்துக்கான மாற்றுத்தலைமைகளை மக்கள்  உருவாக்கியுள்ளார்கள். ஜனாதிபதி தேத்தலுக்கு முன்பு நாம் மலையக மக்கள் மத்தியில் சொன்ன வாக்குறுதிகளை நம்பியே  மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்;. அதற்கேற்ப இ.தொ.கா.வால் இல்லாமல் செய்யப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை இன்று நாம் பெற்றுள்ளோம். மலையகத் தமிழ் மக்கள் அதனை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சையோ அதன் அமைச்சரையோ விமர்சிக்கக் கூடிய தகுதி மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜுடம் இல்லை. காலத்துக்குக் காலம் மந்தி போல கட்சி மாறுமிவர் மற்றவர்களைக் காளான் போன்றவர்கள் என்று சொல்வதானது கேலிக்குரிய விடயமாகும்.


தொண்டமான் பவுண்டேசன் மூலம் இதுவரை காலமும் கட்சி ரீதியான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து பொதுமக்களுக்குப் பகிரப்படாத பொருட்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


யார் எவ்வாறு பிதற்றிக் கொண்டாலும் மலையக வீடமைப்பு, தோட்டப்பகுதி உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய விடயங்களை நாமே முன்னெடுத்துச் செல்வோம்.


தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. மலையகத்தின் நல்லவர்கள் யாவர்? திருடர்கள் யாவர்? என்பதை மலையகத் தமிழ் மக்களுக்குச் சொல்லிக்காட்டத் தேவையில்லை. தொழிலாளர் தேசிய சங்கம் நிதானத்துடன் தனது சேவைகளை முன்னெடுத்துச் செல்லும். அடுத்தத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது குறித்து எமக்கு யாரும் சொல்லித் தரதேவையில்லை. தொடர்ந்தும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் தான். முடிந்தால் சவால் விட்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.


  Comments - 0

  • Nishan Saturday, 14 February 2015 05:56 AM

    அண்ணன் ஸ்ரீதரன் அவர்களே! தொண்டமான் பவுண்டேசன் குறித்து தாங்கள் அறிந்தது என்னவோ??? மக்களிடம் சென்று கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள் அதன் பணி என்ன?? அதனால் மக்கள் அடைந்துள்ள நன்மைகள் என்ன என்பதை... நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் எதையும் ஆராயாது பத்திரிக்கைக்கு அறிக்கை விடுவதை தவிர்த்து மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் ஏதேனும் நன்மைகளை செய்யுங்கள். நன்மை செய்பவர்களை கண்டால் அவர்களுக்கு ஒத்துழைக்காவிடினும் பரவாயில்லை. அவர்களை தூற்றாதீர்கள். நீங்களும் எதையும் உருப்படியாக செய்யமாட்டீர்கள். செய்பவர்களையும் செய்யவிடாதீர்கள். என்ன பிழைப்பு அய்யா இது???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X