2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

17இல் தேர் இழுப்பு, 18இல் நீர்வெட்டு

Kogilavani   / 2015 ஜூலை 28 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இது 45 நாட்கள் திருவிழா காலம். எதிர்வரும் ஓகஸ்ட் 17இல் தேர் இழுப்பு, 18 இல் நீர்வெட்டு அமோகமாக நடைபெறும்' என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொது செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார்.

'கடந்த 15 நாடாளுமன்ற திருவிழாக்களிலும் கலந்துகொண்டோம். ஆனால், ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? தற்போது நடக்கும் பணக்காரர்களுக்கு சார்பான ஜனநாயகம் மக்கள் ஜனநாயகமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.    

'பொதுத் தேர்தல் சாதிக்கப்போவது என்ன' என்ற தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மக்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாத்தளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மலையக மக்களின் வாக்குரிமையை பறித்து, பின் வேறு வழியில்லாமல் வாக்குரிமை வழங்கிய ஐ.தே.க. இன்று நல்லாட்சி தொடர்பில் உழறி திரிகிறார்கள். நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஜனாதிபதி, நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள், மாகாண சபைகளில் 427 பேர், உள்ளுராட்சி மன்றங்களிலே 4,000க்கும் மேற்பட்டவர்கள் மொத்தமாக 5,139 அங்கத்தவர்கள் இருந்தும் இந்த நாட்டிலே மக்களுக்கான மாற்றம் வந்ததா?, பதில் இல்லையென்றால் நிச்சயம் இது மக்களின் ஜனநாயகம் அல்ல' என்றார்.

'சாதாரண சிங்கள மக்களும் பட்டினியோடும் அரைகுறை வயிற்றோடுமே வாழ்கிறார்கள். தோட்ட தொழிலாளர்கள் சுரண்டப்படுவதுப்போல் ஆடைத்தொழிற்சாலைகளிலும் எமது பெண்களும் ஆண்களும் சுரண்டப்படுகிறார்கள். தோட்ட தொழிலாளர், தனியார்துறை ஊழியர் சம்பள உயர்வில் அரசு தலையிடாமல் ஒதுங்கி இருப்பது தாம் முதலாளிகளுக்கு சார்பானவர்கள் என்று அறிவிப்பதற்காகவா? தேசிய இனப்பிரச்சினை என்பது சிங்களவர், தமிழருக்கும் மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. முஸ்லிம்கள்,மலையக தமிழர்கள் என சிறு சமூகங்களோடு தொடர்புப்பட்டதே' என்றும் கூறினார்.

இதன்போது உரையாற்றிய தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன்,

'1931 சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டாலும் 1948இல் மலையக மக்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டது. தொடர்ந்து 40 வருடங்கள் நாடாளுமன்ற தேர்தலில் புள்ளடி போடவில்லை என்றாலும் எழுச்சிகரமான வெகுஜன போராட்டங்கள் மூலம் உரிமைகளை வென்றெடுத்த காலம் இது.

1994ஆம் ஆண்டு சந்திரிக்காவுக்கு ஆட்சியமைக்க ஒரு ஆசனம் தேவைப்பட்டது. அதனை சந்திரசேகரன் மூலம் வழங்கியவர்களே மலையக மக்கள்தான். இதன்மூலமே 18 வருடகால இருண்ட ஐ.தே.க. ஆட்சி தூக்கியெறியப்பட்டது. இருந்தும் மலையக மக்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன செய்தது? அரசியல் என்பது வெறும் புள்ளடி போடுவது அல்ல என்பதை மக்கள் புரிந்துக்கொண்டு போராட முன்வர வேண்டும்' என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .