2025 ஜூலை 12, சனிக்கிழமை

1026 மாணவிகள் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.ரிஃபாத், எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை ஜினராஜ மகளிர் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை விசக்கிருமியின் பாதிப்புக்குள்ளாகிய 1026 மாணவிகள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் 900பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த பாடசாலை இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரில் வீக்குலுவத்தை பகுதியில் அமைந்துள்ள ஜினராஜ மகளிர் கல்லூரியில் இன்று மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளித்தவேளை பிரதான வகுப்பறைக் கட்டிடத்தில் ஒரு வகை விசக்கிருமிகள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உடல் அரிப்பு, தலைசுற்றல் மற்றும் மயக்கத்திற்குள்ளாகிய நிலையில் 1026 மாணவிகள் உட்பட இரு ஆசிரியைகள் உடனடியாக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதில் 126 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையவர்கள் இன்று நண்பகல் வரை ஆரம்ப கட்ட சிகிச்சையைத் தொடர்ந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சரத் வீரபண்டார தெரிவித்தார். 

இச்சம்பவத்தை தொடர்ந்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மற்றும் வைத்தியசாலை பகுதியில் குழுமியதால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கம்பளை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கம்பளை நகர சபையின் சுகாதாரப் பிரிவினர் பாடசாலையை சூழவுள்ள பகுதியில் விசக்கிருமிகள் பரவியதாகத் தெரிவிக்கப்படும் இடங்களில் புகை அடித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைக் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருந்த தரம் 10 மற்றும் 12 மாணவிகள் முதலில் கிருமிகளின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மாணவிகளின் உடலில் ஒவ்வாமை நிலை ஏற்பட்டமைக்கான காரணத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக கம்பளை நகரசபை சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் கம்பளை வலய கல்விப்பணிமனை அதிகாரிகள் சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைக்கு விஜயம் செய்ததுடன் பாடசாலையை இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .