2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

‘மாற்று அரசியலையே செய்தோம்’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

தாம், மலையகத்தில் மாற்று அரசியலைச் செய்தோமே தவிர, எதிர்ப்பு அரசியலைச் செய்யவில்லை என, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜா தெரிவித்தார்.  

ஹட்டனில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ.கே.வௌ்ளையன் நினைவுதினப் பேருரையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே, மலையகத்தில் புதியதோர் அரசியல் கலாசாரம் ஏற்பட்டது என்றும் இதன்போது, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயைக் கொண்டே, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, பதுளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பல பகுதிகளிலும், புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறினார்.  

மலையக மக்களுக்கு, தனி வீட்டையும் தாண்டி கிராமமொன்று தேவை என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தியே, ஆயிரக்கணக்கான தனி வீடுகளோடு கிராமங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  

கட்சியின் தலைவர் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது, அடிக்கல் நாட்டிக் கட்டப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள், மக்களிடம் கையளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளன என்றும் அந்தப் பெருமையுடனேயே, அமைச்சுப் பதவிகளைக் கையளித்ததாகவும் அவர் கூறினார்.  

எனினும், அமைச்சுப் பதவியைக் கையில் எடுத்தவுடன், எம்மையே அகௌரவப்படுத்தும் வகையில் சிலர் பேசுவது, மற்றைய சமூகத்தவர்களும் எம்மை ஏளனமாகப் பேசுகின்ற சூழ்நிலையைத் தோற்றுவித்து வருவதாகவும் இதை மாற்றியமைக்க, மாற்று அரசியலைப் பலப்படுத்துமாறு, கல்வி கற்ற சமூகத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--