2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பெரியமுல்லை ஹோட்டலில் கைகலப்பு;ஒருவர் பலி

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு- பெரியமுல்லை பிரதேசத்தில், நேற்று இரவு இடம்பெற்ற கைகலப்பில், ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொலையுடன் தொடர்புடைய ஆறுபேர், சட்டத்தரணியூடாக பொலிஸில் இன்று  (10) சரணடைந்த நிலையில், பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.   

உணவகத்தில் பணியாளராகப் பணியாற்றிய மொஹம்மத் அஸீஸ் என்பவரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். உணவகத்தின் உரிமையாளரும் அவரது சகோதரரும் ( ஜிப்ரி மற்றும் ரிஸ்வான்) கத்திக்குத்து இலக்கான நிலையில்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

குறித்த உணவகத்துக்கு வானொன்றில் வந்த அறுவர் அடங்கிய குழு, ஹோட்டலுக்குள் வைத்து மது அருந்துவதற்கு முற்பட்டுள்ளனர் என்றும் அதனை உணவகப பணியாளர்களும் உரிமையாளரும் தடுக்க முற்பட்டுள்ளனர் என்றும் இதன்போதே, ஹோட்டல் இருசாராருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த அறுவரில் ஒருவர், கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளதோடு தம்வசம் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதோடு, கூரிய ஆயுதங்களால் கடை உரிமையாளரையும் அவரது சகோதரரரையும் பணியாளரையும் தாக்கியுள்ளனர்.  

கடையில் உள்ளோர் திருப்பித் தாக்கியபோது அவர்கள் அங்கிருந்து தப்பியோடி தலை மறைவாகியுள்ளனர். அவர்கள் தாம் வந்த WP- PA 2394 இலக்கம் உடைய வானை கைவிட்டுச் சென்றுள்ளனர்எனத் தெரிவிக்கப்படுகிறது.  

சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் பலர் அங்கு ஒன்றுகூடினர். இதேவேளை, நீர்கொழும்பு பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், விமானப்படையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.  

அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள சீசீரி கமராக்களில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ள காட்சிகளை பொலிஸார் பார்வையிட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .