2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ கொடபிடியப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு, புத்தகப்பைகள் வழங்கும் வைபவம், கொடபிடிய சாதாத் மகா வித்தியாலயத்தில், செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பேருவளை சீனன்கோட்டை பள்ளிச் சங்கம், சீனன்கோட்டை வாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி மூலம், இந்தப் புத்தகப்பைகள் கொள்வனவு செய்யப்பட்டு, பாடசாலை மாணவர்கள் 500 பேருக்குக் கையளிக்கப்பட்டன.

மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்வி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம். இக்ராமின் வழிகாட்டலின் கீழ், இப்புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். சிஹாப்,

“இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கொடபிடிய சாதாத் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டக் கிடைத்தமை, சீனன்கோட்டை வாழ் மக்களுக்கு ஒரு பாக்கியமாகும். சீனன்கோட்டை மக்கள், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் பல்வேறு வகையிலான உதவிகளைச் செய்தனர். அந்த வகையில், இவ்வூர் மக்களின் வேண்டுகோளுக்கமைய, புத்தகப்பைகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

ஆசிரியை எம்.எஸ். உம்மு ஹபீபா உரையாற்றும் போது, “கல்விப் பணிக்கு உதவி செய்வது, ஒரு மேலான நன்மையான காரியமாகும். அந்த வகையில், வெள்ளத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்ட எமது பாடசாலை மாணவர்களுக்கு 500 புத்தகப்பைகளை வழங்கியதையிட்டு, பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றி கூறுகின்றேன்” என்றார்.

போர்வை முகிதீன் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தவலவர் எச்.எல்.எம். பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்வி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம். இக்ராம், பள்ளிவாசல் இமாம் மௌலவி எஸ்.எம். பைரூஸ், சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். சிஹாப், இணைப் பொருலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். ஹில்மி, சமூக சேவையாளர்களான முகம்மத் நபீஸ், ஸித்னி மர்ஸூக், முகம்மத் ரிப்கான், ஹஸன் ஜெமீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .