2020 ஓகஸ்ட் 13, வியாழக்கிழமை

மாணவர்களுக்கான ஜின்னா புலமைப் பரிசில்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அரசு, இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தின் ஊடாக, 2017ஆம் ஆண்டு, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, 182 மாணவர்களுக்கு, ஜின்னா புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (23) இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர். மொஹான் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டார்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசியர் சம்பத் அமரதுங்க, மொரட்டுவ  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.ஏ.பெரேரா, சங்கைக்குரிய ஓலந்தே ஆனந்த தேரர், அருட்தந்தை க்யூன்தஸ் பெர்னாண்டோ மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளடங்களாக பாரியளவிலானோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத், “மக்களுக்கிடையிலான தொடர்புகளால் உருவாக்கப்படுகின்ற, முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு உறவுகளை, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன பகிர்கின்றன. சிறந்த கல்வி வாய்ப்புக்களுடன், தேசத்தினை கட்டியெழுப்புவதற்கான திறன்களை, அபிவிருத்தி செய்யவதன் நிமித்தம், பாகிஸ்தான், இலங்கை மாணவர்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவினை நல்கும்” என்று கூறினார். மேலும், இவ்விருதுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால சாதனைகள் குறித்தும் நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

ஜின்னா புலமைப் பரிசில்களுக்கு அப்பால், ஒவ்வொரு வருடமும், பாகிஸ்தானிலே உயர் கல்வியினை மேற்கொள்வதற்காக, பாகிஸ்தான் அரசினால் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம்  மற்றும் மருந்தக துறைகளிலே புலமைபரிசில்கள்  வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர். மொஹான் டி சில்வா, பாகிஸ்தானை உருவாக்குவதிலே, மொஹமத் அலி ஜின்னா மேற்கொண்ட அளப்பரிய முயற்சிகளை, உயர்ந்த மரியாதையுடன் இதன்பொழுது புகழ்ந்துரைத்தார். அத்துடன், இருநாடுகளிடையே காணப்படும் வலுவான உறவுகளை அவர் நினைவுகூர்ந்ததுடன், ஜின்னா புலமை பரிசில் திட்டத்திற்குத் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அந்த வகையில், பாகிஸ்தானிய அரசாங்கம், 2006ஆம் ஆண்டு தொடக்கம் ஜின்னா புலமை பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றமையும், கடந்த 13 வருடங்களில் சுமார் 1500 புலமை பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--