2021 மார்ச் 04, வியாழக்கிழமை

'சிங்களத் தலைவர்களே சமஷ்டியைக் கோரினர்'

Princiya Dixci   / 2016 மே 25 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சமஷ்டி முறையானது, நாட்டைப் பிரிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், சமஷ்டியை முதலில் முன்வைத்தவர்கள் சிங்களத் தலைவர்களேயாவர். தமிழர் இந்த நாட்டின் தேசிய இனத்தவர். அவர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும். அதற்கு நாட்டுக்குள் சமஷ்டித் தீர்வு அவசியமானது' என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கையளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'இலங்கையை வட-கிழக்கு, மத்தி மற்றும் கரையோரம் என மூன்று பிராந்தியமாகப் பிரிக்கும் யோசனை 1930இல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், சமஷ்டியைத் தமிழ் மக்கள் 1949ஆம் ஆண்டிலிருந்து தான் கேட்கத் தொடங்கினர்' என்றார். 

'தந்தை செல்வா எனப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலத்தில், தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் பிரபாகரன் வந்திருக்கமாட்டார். அதுபோல வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காலத்திலேயே பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பதை வரலாற்றைப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். 

வடமாகாண சபையின் தீர்வுத் திட்டத்துக்கு, வடமாகாண சபையிலுள்ள சிங்கள உறுப்பினர்கள் ஆதரவு தரவில்லை. அவர்கள் சமஷ்டியையும் வடக்கு - கிழக்கு இணைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், அவர்கள் சிங்களப் பேரினவாதத்துக்கு அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

போர்க்குற்ற விசாரணை மூலம், உண்மை கண்டறியப்பட்ட பின்னரே, தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேச முடியும். அதன் பின்னரே அதனை உருவாக்க முடியும். தமிழர்களின் தாயகம் பிரிக்கப்பட முடியாதது. உலகத்தில் இல்லாத அதிகாரத்தை நாங்கள் கேட்கவில்லை. சமஷ்டி என்பது பிரிவினை எனக்கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், முதலமைச்சர் சி.வி. ஆகியோர் மீது இனவாதப் பிரசாரம் முன்னெடுக்கப்படக் கூடாது' என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .