2021 ஜனவரி 16, சனிக்கிழமை

‘தி.மு. ஜெயரட்ன, இனமத பேதமற்ற பெருந்தலைவர்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

நற்குணமும் அன்பும் பண்பும் கொண்ட தி.மு இனமத பேதமற்ற ஒரு பெருந்தலைவராவார் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தி. மு. ஜெயரட்ன காலமானதையொட்டி, அவர் இன்று (21) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தி.மு. என அன்புடன் அழைக்கப்படும் ஜெயரட்ண 1970ஆம் ஆண்டு இலங்கைப் நாடாளுமன்றத்தில் கம்பளைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வேளையில், தானும் அதே வருடம் கிளிநொச்சித் தொகுதியின் பிரதிநிதியாகத் தெரிவாகியிருந்தேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகசேவகனாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்து நாடாளுமன்றம் வந்தும் தனது சமூகத் தொண்டை அவர் கைவிடவில்லையெனத் தெரிவித்துள்ள அவர், மிகச் சிறந்த பேச்சாளராக அவரிருந்த போது பல நாடாளுமன்ற உரைகளை விருப்புடன் தான் நாடாளுமன்றில் கேட்பதுண்டெனவும் கூறியுள்ளார்.

“அவரைப் பற்றியொரு விடயம் அனேகர் அறியாமலிருக்கலாம்.  அவருடைய பேச்சுக்களின் வேகத்தைத் தொடர முடியாமல் பாராளுமன்றத்தில் கடமையாற்றிய சுருக்கெழுத்தாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டதை நான் அறிவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

“அவருடைய உரைகளைப் பதிவுசெய்கின்ற சுருக்கெழுத்தாளர்கள் தமது எழுத்துக்களில் பல இடைவெளிகள் விட்டு எழுதி அவருடைய உரை முடிந்தபின் தாம் பதியத் தவறிய சொற்களை அவரைக் கேட்டே நிரப்புவது மிகவும் சுவாரஸ்யமான விடயமாக அவர்கள் பேசிக்கொள்வார்கள்.

“எனக்கு ஞாபகத்துக்கு எட்டிய வகையில் யுத்தம் முடிந்த பின் முதன்முதல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கஷ்டப்பட்ட மக்களுக்குப் பலவகையான உணவுப் பொருள்கள் வழங்கியதை நேரடியாகப் பார்த்தேன்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்தவேளை ஆற்றிய சேவைகள் மறக்க முடியாதவை.

“நீண்டகால நண்பரான அன்னாரின் பிரிவு, எனக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்ததுடன், அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கும் தொகுதி மக்களுக்கும் ஏனைய நண்பர்கள்,  கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்” எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .