2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு சேவை மூப்பு அடிப்படையில் படிப்படியாக நிரந்தர நியமனம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு சேவை மூப்பு அடிப்படையில் படிப்படியாக நிரந்தர நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தபோது தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளின்பேரிலும் வைத்தியசாலை மேம்பாட்டுப்பணிகளை ஆராயும் பொருட்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று செவ்வாய்க்கிழமை நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி, பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரவிராஜ், வைத்தியசாலைச் செயலாளர் பிரசாந்த், நிர்வாக உத்தியோகத்தர் உட்பட வைத்திசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோருடன் வைத்தியசாலைப் பணிப்பாளரின் பணிமனையில் விரிவான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட அமைச்சர், வைத்தியசாலையில் முக்கிய பிரச்சினையாக காணப்படும் சுத்திகரிப்பு விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

சுகாதாரத் தொழிலாளர் பற்றாக்குறையாக காணப்படுவதுடன் அவர்களில் பலர் தற்காலிகமாகவே பணிபுரிவதையும் நிர்வாகத்தினர் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத் தொண்டர்களுடனும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுடனும் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு விரைவிலேயே சேவை மூப்பு அடிப்படையில் கட்டம் கட்டமாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் உறுதிமொழியினை வழங்கியிருந்தார்.

வடபகுதி சுகாதாரதுறையில் பிரதான பங்கினை வகிக்கும் யாழ். போதனா வைத்தியசாலை மேம்பாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு பங்களிப்புச் செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொண்டதோடு மாதம் ஒருமுறை தான் நேரடியாக விஜயம் செய்து வைத்தியசாலையின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--