2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அவசரகால சட்டம் நாட்டின் நலன், இயல்பு நிலைக்கு பொருத்தமற்றது - சந்திரகுமார்எம்.பி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதென்பது எமது நாட்டின் பெருமைக்கு இழுக்காகும்.  நாட்டினுடைய நலனுக்கும் இயல்பு நிலைக்கும் அது பொருத்தமற்றது என்று அவசர கால சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் தொடர்ந்திருக்கும் எந்த நாடும், ஜனநாயகத்திலும் சுதந்திரத்திலும் குறைபாடுள்ளதாகவே இருக்கும். அது மட்டுமல்ல, அது அச்சநிலையில் இருந்து விடுபட முடியாததாகவே இருக்கும்.

அத்துடன் இன்று அதிக முக்கியத்துவமாக இருக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் இது மிகப்பெரிய இடையூறாகவே தொடர்கிறது என்பதையும் தான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனவேதான் அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் புத்தியீவிகளும் எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் நடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாற் :-

"என்னதான் பாதுகாப்புக் காரணங்களைச் சொன்னாலும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது என்பது, நாட்டின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாகவே இருக்கும். ஆகவே நாட்டில் நீடித்திருந்த போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்ததைப் போல இந்த அரசாங்கமே அவசரகாலச் சட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தார்மீகப் பொறுப்புடன் இருக்கிறது.

அதேவேளை, இது இந்தத் தேசத்தையும் இந்தத் தேசத்தின் மக்களையும் நேசிக்கின்ற அனைவருக்குமான தார்மீகப் பொறுப்பாகவும் இருக்கின்றது. ஆனால், இங்கு குறுகிய சுய அரசியல் இலாப நோக்கங்களுக்காக மக்களையும் தேசத்தையும் பற்றிய எந்தவித உணர்வுபூர்வமான அக்கறையில்லாதவர்களாலும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடிக்கப்பட வேண்டியிருக்கிறது.

இந்தத் தேசத்தில் இரத்தக் களரியை நிறுத்துவதற்கு விரும்பாத உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகளாலும் இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாத நிலை நீடிக்கிறது. நாம் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இந்தச்சட்டத்தை எதிர்க்கிறோம். ஆனால், நடைமுறை நிலைமையில் இது தவிர்க்கமுடியாத தேவையாகவும் இருக்கிறது என்பதை வருத்தத்துடன் இங்கே கூறிவைக்கிறேன்.  

தன்னுடைய சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காது அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளால், எழுகின்ற துன்பங்களே இந்த நாட்டில் பல நெருக்கடிகளுக்கும் காரணமாகிறது.

மக்களின் துன்பங்களை அரசியல் மூலதனமாக்கி பத்திரிகைகளிலும் வெளிநாடுகளிலும் இணையத்தளங்களிலும் கண்ணீர் வியாபாரம் செய்கிற அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும் அவர்களுடைய நல்வாழ்வுக்காகவும் சிந்திக்கவேண்டும். அதாவது இவர்கள் யதார்த்தமான அரசியல் கலாச்சாரமொன்றை நோக்கி முதலில் வரவேண்டும்.

கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் போரையும் வளர்த்து, அவசரகாலச் சட்டத்தையும் நீடித்திருந்தன. ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த நிலையை மாற்றி, போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.  

இதன்மூலம் நாட்டில் இருந்த அச்சநிலை மாற்றமடைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக, அவர் அவசரகாலச் சட்டத்தையும் நீக்குவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட அனைவரும் பொருத்தமான சூழலை உருவாக்கி ஒத்துழைக்க வேண்டும்.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு நாட்டிலுள்ள சகலருக்கும் உண்டு. இதில் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பும் கடமையுமுண்டு. ஊடகங்கள் நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையே  நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பவேண்டும். அரசாங்கத்துக்கும் பிற கட்சிகளுக்கும் இருக்கும் பொறுப்புகளை பாரபட்சமின்றிச் சுட்டிக்காட்ட வேண்டும்.

மக்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலையில் தனியே அரசாங்கம் மட்டும் இருப்பதல்ல. அனைத்துத் தரப்பினரும் இருக்கவேண்டும். குறிப்பாக அரசியற் கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் இதில் முக்கிய பொறுப்பும் கடமையுமுண்டு.   

அப்படி இருந்தால்தான், எதையும் சாதிக்க முடியும். எந்தப் பிரதான பிரச்சினைக்கும் தீர்வைக் காணமுடியும். அது இனப்பிரச்சினையாக இருந்தால் என்ன? அவசரகாலச் சட்டமாக இருந்தால் என்ன? அபிவிருத்தி, மீள்கட்டுமானம் என எதுவாக இருந்தாலும் கூட.  

ஆகவே, எல்லாவற்றையும் புதிதாகச் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இப்போது அனைவரும் இருக்கிறோம். ஏனென்றால், நாட்டில் இப்போது போர் இல்லை. நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருந்த பல விடயங்கள் இன்றில்லை. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. இந்த நாடு இப்போது அபிவிருத்தியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

அந்த அபிவிருத்திப் பணிகளில் தங்களுடைய பங்களிப்பைச் செய்வதற்கு ஆர்வத்தோடு ஒரு தொகை மக்கள் இருக்கிறார்கள். அவர்களால் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கமுடியும். அதற்குரிய வளங்கள் அந்தப் பிரதேசங்களில் உண்டு. ஆனால், அவர்களால் அந்தப் பங்களிப்பை வழங்கமுடியாமல் இருக்கிறது.

அவர்கள் முதலில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய தொழில்களைச் செய்வதற்கு அவர்களால் முடியவில்லை.

அவர்கள் கடந்தகால வன்முறைச் சூழலில் எல்லாவற்றையும் இழந்து விட்டனர். இப்போது அவர்களுக்கு இழப்பீடு தேவையாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதும் அவர்கள் தங்களுடைய பாதிப்புகளுக்கு நட்டஈட்டைப் பெறுவதும் உலக நடைமுறையாகும்.  

இதை இந்தமன்றிலே இருக்கின்ற அனைவரும் நன்றாக அறிவர். அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரில்சென்று வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு அங்குள்ள நிலைமைகளைப் பற்றித்தெரியும்.

இந்த மாவட்டங்களில், எதிர்வரும் மழைகாலத்தில் மிகப் பெரியதொரு அனர்த்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அங்கிருக்கும் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களுக்கான இருப்பிட வசதிகள் இன்னும் சீராகவில்லை. இதை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தறப்பாள்களின் கீழ் இருக்கின்ற மக்கள் அமைக்கப்படவுள்ள நிரந்தர வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர், தற்போது அவசரமாக எதிர்வரும் பருவமழைக்கு முன்னர், தற்காலிக வீடுகளைப் பெற்றுக் கொள்வது மிக மிக அவசியமாகிறது.  

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் மீள் குடியேறிய 6,985 குடும்பங்கள் தகரம், சீமெந்துத் தளங்களுடனான தற்காலிக வீடுகள் இன்னும் 3,500 நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது.  

இதேபோன்று, பூநகரிப்பிரதேச செயலகர் பிரிவில் 1416 தற்காலிக வீடுகள் பூர்த்தியாக்கப்பட வேண்டியுள்ளது என்பதை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரைச்சி, பளை பிரதேச செயலர் பிரிவுகளில் இந்தத் தற்காலிக வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் 70 வீதம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. ஆகவே இவற்றை மிக வேகமாகச் செய்யவேண்டும். இல்லையெனில் அடுத்துவரும் மழைகாலத்தில் மிகப் பெரிய அனர்த்த அவசர நிலையை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

அடுத்தது மீள் குடியேற்றப் பகுதிகளில் நிலவும் மருத்துவப் பிரச்சினைகளும் பற்றாக்குறைகளும் எதிர்வரும் நாட்களில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. தொற்றுநோய்கள் ஏற்படுத்தும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நெருக்கடி நிலையும் உருவாக வாய்ப்பிருக்கிறது.   

இதேவேளை எதிர்வரும் மாரிகாலத்தைக் கடப்பதற்காக மேலும் ஆறு மாதங்களுக்குரிய உலர்உணவு நிவாரணத்தை வழங்கவேண்டும் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒரு அவசிய தேவையாக இருக்கிறது.  உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு,  சொத்திழப்பு, பிரதான உழைப்பாளர்களின் இழப்பு எனப் பலவகையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் பெரும் சிரமத்தோடு இருக்கிறார்கள்.  

இவர்களுக்கு இப்போது, அவசரமாகச் செய்ய வேண்டியது, போரின்போது  கைவிட்ட பொருட்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையே. இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலே, அவர்களுடைய இழப்புகளின் தாக்கத்தைக் குறைக்கமுடியும்.

அடுத்த கட்டமாக பாதிப்பின் தன்மைகளுக்கு ஏற்றவகையில் இழப்பீட்டை வழங்கலாம். இது இன்று அவசியமாக உள்ளது. மக்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கும் அவர்களை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கும் இந்த நடவடிக்கை அவசியமாக இருக்கிறது.

இதைப்போல, அரசாங்கம் இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான கடனுதவியைச் செய்கிறது. விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. கடற்றொழில் செய்வோருக்கும் மானிய உதவிகள் கிடைக்கின்றன. இதற்காக நாம் அரசாங்கத்தைப் பாராட்டவேண்டும்.

ஆனாலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இருக்கும் மக்கள் தொழில் வாய்ப்புகளில்லாமல் கடுமையாகச் சிரமப்படுகிறார்கள். இப்படி அவர்கள் சிரமப்படும்போது அதன்விளைவாக உருவாகும் மன உளைச்சல் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தையே உருவாக்கும்.

போரில் முற்றாகவே பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து, அவர்களைப் புதியவாழ்வில் ஈடுபடுத்துவதற்கான சிறப்புவேலைத் திட்டமொன்றை அரசாங்கம் குறுகிய கால அடிப்படையிலாவது செய்ய வேண்டும்.

இதேவேளை கிளிநொச்சியில் இருக்கின்ற தொழில்நுட்பக் கல்லூரியை மீளவும் இயங்கவைப்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில் நுட்பஅறிவை வளர்க்கலாம்.  

புதிய தொழில் மையங்களை அந்த மாவட்டங்களில் ஆரம்பிப்பதன் மூலமாக பலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும். அப்படியொரு ஏற்பாட்டை அரசாங்கம் கண்டிப்பாகச்செய்து தரும் என்ற நம்பிக்கையோடு அங்குள்ள மக்கள் இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளிலும் பிற சலுகைகள் மற்றும் உதவிகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு செய்யப்படுவது உலகெங்கும் உள்ள பொதுவான வழமையாகும். ஆகையால் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் அத்தகைய சிறப்பு ஏற்பாடொன்றை அரசாங்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பாதிப்படைந்த அனைவரும் நன்மையைப் பெறுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, ஆதரவளிப்பது என்பது ஒவ்வொருவருடைய மனிதாபிமானக் கடமையாகும்.

அரசாங்கத்தின் கொள்கை சார்ந்து, சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகையால், தொண்டர் அமைப்புகளின் மூலமாகக் கிடைக்கும் உதவிகளிலும் அந்த மக்கள் பாதிப்புகளையே சந்தித்திருக்கின்றனர்.

பல ஆயிரக்கணக்கான விதவைகளும் பெற்றோரை இழந்தோரும் ஊனமுற்றோரும் உதவிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு முதற்கட்டமாக உதவிகள் தேவை. அடுத்தகட்டமாக இவர்கள் சுயவாழ்வில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் அவசியம்.  

போருக்குப் பின்னரான வாழ்வொன்றைப் பெறுவதற்கு இவர்களுக்கு அரசாங்கமே உதவவேண்டும். இவ்வாறான உதவி நடவடிக்கைகளை போருக்குப் பின்னர் பல நாடுகளும் மேற்கொண்டிருக்கின்றன.  

ஆகவே இவற்றை நாம் கவனத்தில் எடுத்து, பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் மேம்படுத்துவதற்கு முயற்சிப்போம்.

அப்படி அமையும்போதுதான் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முழுமையான அர்த்தத்தைப் பெறும். நாட்டில் இயல்பு நிலையும் அமைதியும் ஏற்படும். நாடு முழுமையான நிறைவை அப்போதுதான் அடையும்.

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  இதற்காக அரசுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.  அதேவேளை அங்கு பல உதவிகள் தேவைப்படுகின்றது.   

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையங்களில் கடந்த ஆண்டு சிலபகுதிகளில் மீள்குடியேற்ற அரசு அனுமதித்திருந்தது. இதனால் சிலபகுதி மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்தார்கள். மேலும் உயர்பாதுகாப்பு வலயங்களில் முழுமையாக மீளக்குடியேற்றவும் தற்காலிக முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீளத் தமது சொந்தப் பிரதேசங்களில் சந்தோசமாக வாழ்ந்து தமது தொழில்துறையை மேற்கொள்ளவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வலிகாமம் வடக்கு கீரிமலை வீதி - மாவட்டபுரம் வீதியில் சுண்ணாம்புக்கல் அகழ்தல் மிகப் பாரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அப்பிரதேசத்திற்குச் சென்று பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்கள்.  ஆனால் இப்போதும் இக்கல் அகழ்வு நடவடிக்கை பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  

இவை உடனடியாக தடுக்கப்படவேண்டும்.   இல்லையெனில் பாரிய ஆபத்து வலி வடக்குக்கு மட்டுமல்ல முழு யாழ். குடாநாடுமே பாதிக்கப்படப்போகிறது. நன்னீர், குடிநீர் எல்லாம் உவர்நீராக மாறும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உடன் நடவடிக்கைக்காக அரசிடம் வேண்டுகிறேன்" என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--