Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்கும் மறுவாழ்வுக்கும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் சிலரால் கூறப்பட்டுள்ளது. போர் முடிந்து இரண்டாண்டுகளுக்குள் வடபகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் உயிர் அச்சமின்றி வாழ்கிறார்களென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இன்று நடைபெறும் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை, சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள், சமூகசேவைகள், சுற்றாடல் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதத்தில் - யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் சார்பாக என்னுடைய கவனங்களை இங்கே தெரியப்படுத்துகிறேன்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக்கப்பட்டுள்ளது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பயிர்ச்செய்கை – கடற்றொழில் உள்ளிட்ட தொழில் முயற்சிகளிலும் மக்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். ஆனாலும,; இந்த மக்களுக்கு ஏராளம் பிரச்சினைகளும் தேவைகளும் இருக்கின்றன. இவற்றைப் பேசித் தீர்ப்பதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம். நல்லிணக்கத்தின் மூலம் ஒரு புதிய வாழ்க்கைக்குச் செல்வதையே மக்கள் விரும்புகிறார்கள்.
குற்றஞ்சாட்டுவதாலோ மற்றவர்களைக் கண்டிப்பதன் மூலமோ தங்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடப்போவதில்லை என அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆகவே, இத்தகைய சூழலில் வடபகுதியின் சுகாதாரம் பற்றிய என்னுடைய கவனத்தை இங்கே தெரியப்படுத்துகிறேன்.
யாழ்ப்பாண மாவட்டம் நீண்டகாலமாகவே முழுமையான அபிவிருத்திக்குட்படவில்லை. நாட்டில் நிலவிய போரின் காரணமாக இதுவரையிலும் அபிவிருத்திக்கான சூழல் இருக்கவில்லை. இதனால் ஒழுங்கான வடிகால்களை அமைப்பது தொடக்கம் போதிய சுகாதார வசதிகள் எதுவும் அங்கே செய்யப்படவில்லை.
அத்துடன் வலிகாமம் வடக்கு, தீவகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களும் சேர்ந்து ஒரு சிறிய நிலப்பரப்பில் அதிகமான மக்கள் வாழும் நிலையே அங்கே காணப்படுகிறது. இது யாழ்நகரை அண்டிய பகுதியில் சனநெரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
யாழ்ப்பாண நகரத்தின் சுகாதார நிலைமைகள் மிக மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. அங்கே வடிகாலமைப்புகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். நகரின் விரிவாக்கத்துக்கு ஏற்றமாதிரி புதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அங்கே சுகாதாரப் பிரச்சினைகளும் தொற்று நோய் அபாயங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தைக் கலவரப்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சினையாக டெங்கு நோய் காணப்படுகிறது.
இப்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக மீண்டும் அப்படியொரு அபாயம் உருவாகியிருப்பதாக யாழ். மாவட்டச் சுகாதார சேவையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆகவே சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாம் செய்ய வேண்டியுள்ளது.
இதைவிட அங்குள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். தீவுப்பகுதியின் மருத்துவ நிலைமையை மேம்படுத்த வேண்டும் என அங்குள்ள மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். தீவுப்பகுதியில் மீளக்குடியேறுவோரின் தொகை அதிகரித்திருப்பதால் அங்குள்ள மருத்துவ மனைகளுக்கான ஆளணிப்பற்றாக்குறையையும் வளப்பற்றாக்குறையையும் போக்கவேண்டியுள்ளது.
அவ்வாறே வடமராட்சி கிழக்கில் மருதங்கேணி மருத்துவமனையை மீண்டும் விரைவாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. வடமராட்சி கிழக்கில் மீள்குடியேறிய மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக அங்கே மிகச் சிரமப்படுகிறார்கள்.
வடமராட்சி கிழக்கில் மேலும் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டிய இடங்களான கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களுக்கான நித்தியவெட்டை மருத்துவமனையையும் விரைவில் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
அவ்வாறே வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குயேற்றம் ஆரம்பமாகியுள்ளதால், தெல்லிப்பளை மருத்துவமனையை விரிவாக்கி நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது.
இதேவேளை வடபகுதியிலுள்ள சித்தமருத்துவத்துறையையும் நவீனப்படுத்த வேண்டியுள்ளது. கைதடியிலுள்ள சித்த மருத்துவத்துறைக்குரிய மேலதிக வளங்கள் வழங்கப்படவேண்டியுள்ளன. அதற்கான கோரிக்கைகளை சித்தமருத்துவத்துறையினர் விடுத்திருக்கின்றனர். சித்தமருத்துவத்துறையை நவீனமயப்படுத்தும்போது பாரம்பரிய மருத்துவத்துறையின் சிறப்புகளையும் நன்மைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ள வழியேற்படும்.
ஆகவே இவற்றில் சுகாதார அமைச்சுக் கூடுதலான கவனத்தைச் செலுத்து வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்க வேண்டியதாக இருந்தாலும் இந்த மருத்துவமனைக்கான சாதன வளங்களை மேலும்; மேம்படுத்தவேண்டியிருக்கிறது.
ஆகவே இதற்கான தனியான ஏற்பாடுகள் அவசியமானவை. ஏனெனில், வடபகுதியிலுள்ள ஒரே போதனா மருத்துவமனையாகவும் பிரதான மருத்துவமனையாகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையே இருக்கிறது.
அத்துடன் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறம்பட இயங்க வைப்பதன் மூலம் மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தி வைத்திருக்க முடியும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு வருடமும் பட்டப்படிப்பை முடித்து நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் மருத்துவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகின்றனர். எமது பிரதேசங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையினால் எமது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்னறனர். யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியேறியுள்ள நிலையில் மருத்துவர்களின் தேவை அம்மக்களுக்கு மிகவும் தேவைப்படுகின்றது. இன்றைய எமது மக்களின் அவசர அவசிய சேவையை கருத்தில் கொண்டு எமது தமிழ் பேசும் வைத்தியர்களை எம் மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டும் என இவ் உயரிய சபையின் ஊடாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இதேவேளை யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற காலத்திலும் அம்மக்களுடன் நின்று சேவையாற்றும் மருத்துவர்களை நான் இவ்வேளையில் கௌரவப்படுத்துகின்றேன். விசேடமாக எமது பிரதேசங்களில் சேவையாற்றும் சிங்கள மருத்துவர்களின் சேவையையும் நான் பாராட்டிக் கௌரவிக்கின்றேன்.
பட்டப்படிப்பை முடித்து ஒவ்வொரு வருடமும் வெளியேறும் மருத்துவர்களை அவர்களின் பிரதேசங்களில் கட்டாயமாக ஒருவருடத்திற்காவது சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சரை இச்சபையின் ஊடாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இனி, இந்தப் பிரதேசங்களில் உள்ள சிறுவர் நிலைமை தொடர்பான கவனங்களை முன்வைக்கிறேன். பொதுவாகவே சிறுவர் உரிமை மீறல்கள் தொடர்பாக தினமும் ஊடகங்களில் பல கவலைக்குரிய செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலையைப் போக்கும் வகையில் சிறுவர் நலனிலும் பாதுகாப்பிலும் அரசாங்கம் கூடுதலான கவனங்களைச் செலுத்த வேண்டும்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலத் திட்டத்தை அரசு முறைப்படுத்திச் செயற்படுத்தவும் வேண்டும்.
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் ஏனைய வடக்குக் கிழக்கிலும் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் முன்வைப்பது அவசியமாகிறது. இந்தச் சிறுவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசாங்கத்தின் திட்டங்களும் ஏற்பாடுகளும் அமைந்தால்தான் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு இருக்க முடியும்.
நம்பிக்கை இழக்கும் சிறுவர்கள் சமூகத்தை எதிர்நிலையிலேயே வைத்து நோக்குவதற்கு முற்படுவர். ஆகவே இந்தச் சிறார்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி கொண்டிருக்கும் கரிசனைகள் பாராட்டுதற்குரியவை.
போருக்குப் பின்னர் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து ஆதரவற்ற சிறார்களையும் போரினால் அங்கவீனமான சிறார்களையும் அரசாங்கம் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
இதைப்போல இன்னும் பல நூற்றுக்கணக்கான சிறார்கள் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ளனர். இந்தச் சிறுவர் இல்லங்களை உள்ளுர்களிலுள்ள சமூக அமைப்புகளே பராமரித்து வருகின்றன. ஆனாலும் இந்த இல்லங்களுக்கான உதவிகள் மேலும் தேவைப்படுகின்றன.
இந்த உதவிகளை சமூக சேவைகள் அமைச்சுச் செய்ய வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் இருக்கின்ற வயோதிபர் விடுதிகளுக்கான உதவிகளையும் சமூக சேவைகள் அமைச்சு செய்யவேண்டியுள்ளது.
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்ட வயோதிபர் இல்லத்தை மீண்டும் இயங்கவைப்பதற்கான அனுமதியையும் உதவியையும் சமூக சேவைகள் அமைச்சு செய்ய வேண்டும். இந்த வயோபதிபர் இல்லம் இப்போது படையினரின் பாதுகாப்பிலுள்ளது.
இங்கேயிருந்த வயோதிபர்கள் வவுனியாவில் தற்காலிக இல்லமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களை கிளிநொச்சி இல்லத்துக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உபகாரச் சம்பளம் பெறுவோரின் பிரச்சினைகளும் இருக்கின்றன. இவர்களுக்கான உதவு தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். இவர்கள் ஆதரவற்ற நிலையில்தான் அரசாங்கத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெறுகிறார்கள்.
யுத்தம் முடிந்தாலும் யுத்தத்தின் வடுக்கள் நீங்கவில்லை. அது நீங்குவதற்கு இன்னும் சில காலம் செல்லும்.
யுத்தத்தைச் சந்தித்த நாடுகளில் இந்த மாதிரி நிலைமை எதிர்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தே இந்த நிலைமையை மாற்றியிருக்கிறார்கள்.
ஆகவே அந்த யுத்தத்தின் வடுக்களைத் தாங்குவோரைப் பராமரிப்பதும் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகிறது.
இந்த மாவட்டங்களில் அங்கவீனமுற்றோரின் தொகை ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான நிரந்தர உதவிகள் அவசியமாவை. போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளையும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அப்போதுதான் இந்த நாடு முழுமையான அளவில், வன்முறைக்காயங்களில் இருந்து விடுபட்டதாகும்.
சமூகசேவைகள் அமைச்சின் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்கும் போது எனக்குப் போரினாலும் பிற காரணங்களாலும் ஆதரவற்ற நிலையில் இருப்போரைப் பற்றிய எண்ணங்களே வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளாக 2311 பேர் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும்.
இதேவேளை யாழ் மாவட்டத்தின் மொத்த விதவைகளின் எண்ணிக்கை 29ஆயிரத்து 575 ஆகும்.
இந்த விதவைகளில் பெரும்பாலானவர்களுக்கு ஆதரவோ உதவிகளோ இல்லை. அதனால் இவர்கள் மிகவும் சிரமமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கான வீட்டு வசதி, மலசல கூட வசதிகள் போன்றவற்றைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் தேவைப்படுகின்றன.
இதில், 1347 பேர் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளம் விதவைகள். 4000 ஆயிரம் பேர் 20 வயது தொடக்கம் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன. குறிப்பாக இவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களைச் செய்வதன் மூலம் இவர்களுடைய குடும்பங்களின் வறுமையையும் போக்க முடியும். அதேவேளை அபிவிருத்தித்திட்டங்களிலும் இவர்களை இணைத்துக் கொள்ளலாம்.
இவர்களுக்கான விசேட சலுகைக் கடன் திட்டங்களையும் தொழிற் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் விதவைகள் பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமல்ல, இந்தக் குடும்பங்களின் இளைய வயதுப் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும்.
இந்த விதவைகள் மற்றும் அங்கவீனர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களையும் தொழிற்பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் மக்கள் அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக்கூடிய ஆற்றலும் திறனும் உடையது இந்த அரசு என்ற மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சுற்றாடல் பற்றிய எனது அக்கறைகளையும் இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.
உலகம் முழுவதும் இயற்கை அனர்த்தங்கள் அதிகமாகி வருகின்றன. எமது நாட்டிலும் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மிகக்கொடியவை.
இப்போதும் மழையும் வெள்ளமும் என்ற நிலையே நாட்டில் உள்ளது. கடந்த மாதம் எமது நாடாளுமன்றத் தொகுதியினுள்ளும் வெள்ளம் புகுந்திருந்தது.
இதெல்லாம் சுற்றுச்சூழலை நாம் கவனிக்கத்தவறியதன் விளைவுகளே. அத்துடன் எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழலைப் பற்றி நாம் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்று சிந்திப்பதற்காகவே இந்த அனர்த்தங்;கள் ஏற்பட்டுள்ளன என்று கருதுகிறேன்.
எமது நாடு மிகக் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. இப்போது அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறது. ஆனால் யுத்தத்தையும் விடக் கொடியது இயற்கையின் சீற்றம்.
ஆகவே இயற்கையின் சீற்றத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. இயற்கை ஒரு பிரியமான தாயைப் போன்றது. அதை நாம் சீற்றத்துக்குள்ளாக்கினால் அது மிகக் கொடிய பேயாகிவிடும்.
ஆகவே இயற்கை வளங்களைப் பேணுவது தொடக்கம் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது வரையில் நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
வடக்கிலிருந்து மண் அகழ்வும் சுண்ணக்கல் அகழ்வும் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளன. அத்துடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் சிறப்பு அடையாளமான பனை வளப் பாதுகாப்பும் கண்டல் காட்டின் பராமரிப்பும் அவசியமாகும்.
யாழ்ப்பாணம் ஒரு சிறு தீவு. காடுகளோ ஆறுகளோ இல்லாத பிரதேசம். அங்கே குடிநீருக்கே அடுத்த மாவட்டத்தை எதிர்பார்த்திருக்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான விசேட திட்டத்துக்கு அரசாங்கம் ஏற்பாடொன்றைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆகவே சமாதானத்துக்கும் சக வாழ்வுக்கும் அடிப்படையாக இந்த விடயங்களில் உரிய நடவடிக்கைகளை சம்;மந்தப்பட்ட அமைச்சுகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டு எனது உரையினை நிறைவு செய்கிறேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago