2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பச்சிலைப்பள்ளி - பூநகரி பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு துரித நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் அபிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கும் இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்களின் தேவைகளை விசேட திட்டங்களின் மூலம் நிறைவேற்றுவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்தில் 10ஆம் திகதியும் ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் 12ஆம் திகதியும் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கலந்தாராய்வின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தப் பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தை முழுமைப்படுத்துவதற்கு படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது எனவும் படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பொது மைதானம், புனகரி மருத்துவமனை, இயக்கச்சிப் பகுதியில் உள்ள கடைத்தொகுதிகள், பாடசாலை வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலை மற்றும் மக்கள் குடியிருப்புகள் போன்றவற்றை விரைவில் உரிய தரப்பினரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களிலுள்ள பொதுச் சந்தைகளை அமைக்கும் பணி துரிதப்பட்டுள்ளதாகவும் இவற்றில் எட்டுச் சந்தைகளை அடுத்த மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்க முடியும் எனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கு  துரித கதியிலான இலவச மின்விநியோகம் நடைபெற்று வருவதாகவும் வீதி அபிவிருத்திப் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன எனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை, பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திலுள்ள இத்தாவில், கிளாலி, வேம்போடுகேணி, முகமாலை ஆகிய கிராம அலுவர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தங்களின் ஊர்களுக்குச் செல்வதற்குத் தாம் எதிர்பார்த்தவாறிருப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் பச்சிலைப்பள்ளிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கேட்டனர்.

இதற்கான நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்குமாறும் இதற்கு படைத்தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் பணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .