2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தவும்: டக்களஸிடம் கோரிக்கை

Kanagaraj   / 2013 ஜூலை 30 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளால் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் அந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தள்ளனர். 

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகள் தமது கடல் எல்லைக்குள் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் நாளாந்தம் தமது வலைகள் அறுக்கப்படுவதாகவும், இதனால் தாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்கிவருவதாகவும் இதனை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் 'இரட்டைமடிவலை' என்ற தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளால் எமது கடல்வளங்கள் மட்டுமல்லாது வடபகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது இந்திய மீனவர்களது அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசதரப்பிற்கு எடுத்துரைத்தமைக்கு அமைவாக குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் பொருட்டு குழுவொன்று இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழு கொழும்புக்கும், வடபகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு கொழும்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடும் அதேவேளை, வடபகுதிக்கு வருகைதரும் மேற்படி குழுவிற்கு குறித்த விடயம் தொடர்பாக தம்மோடும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே வடபகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தையும், கடல்வளத்தையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் வடபகுதிக்கு வருகை தரும் இந்திய பிரதிநிதிகளிடம் தொழில் பாதிப்பு குறித்து எடுத்து விளக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர்; இதன்போது வலியுறுத்தினார்.

இதன்போது யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி, வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமமேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--