2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பொதுச்சுகாதார பரிசோதகர்களை பிரதேச சபைகளுக்கு மாற்ற சி.வி உத்தரவு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை பிரதேச சபைகளுக்கு மாற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி கலந்துரையாடலில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு, நல்லூர், கரைச்சி, வடமராட்சி தெற்கு - மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில், இன்றிலிருந்து ஆறுமாத காலப்பகுதியினுள் வடமாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளுக்கும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஆளணி மாகாண சபையினால் ஏற்படுத்தித் தரப்படும் என்றும், அதற்கான ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதேச சபைகளில் இணைக்கப்பட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கான சம்பளத்தினை சுகாதார அமைச்சு கொடுத்து வரும் என்றும், தொடர்ந்து பிரதேச சபைகளில் ஆளணி உருவாக்கப்பட்டதன் பிற்பாடு உள்ளூராட்சி அமைச்சு சம்பளக் கொடுப்பனவை மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த உத்தரவின் பிரகாரம் யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ;கரிப்புப் போராட்டம் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பு என்பன முடிவுக்கு வந்தது.

யாழ்.மாவட்டத்தில் உடுவில் (வலிதெற்கு), சங்கானை (வலி.தென்மேற்கு), தெல்லிப்பளை (வலி.வடக்கும்) மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச சபைகளில் கீழ் பணியாற்றி வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் மாற்றும்படி வைத்தியதிகாரிகள் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.

இதனால், பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றம் பெற்று பணியாற்றுமாறு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரிசிறி உத்தரவிட்டார்.

எனினும் அதற்கு சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் 70 இற்கும் மேற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், யாழ்.மாவட்டத்தில் சந்தைகள் உள்ளிட்ட பல இடங்கள் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வந்தன. இதனால் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் இது குறித்த முடிவு எடுப்பதற்காக வடமாகாண முதலமைச்சரினால் நேற்று (02) அவரச கலந்துரையாடல் ஒன்று கூட்டப்பட்டதிலேயே மேற்குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டு, இந்தப் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .