2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஆளுநர் அலுவலகம் முன்பாக மாநகரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன் 


தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறிய யாழ். மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், தங்களை  ஏமாற்றி வருவதாகக்  கூறி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக யாழ். மாநகரசபை சுகாதார ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் திங்கட்கிழமை (21) ஈடுபட்டனர்.

சுகாதார தொழிலாளர்கள் மற்றும் வேலைப்பகுதி தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகரசபை நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும்,  இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில், தங்களுக்கான நிரந்தர நியமனத்தை  விரைவில் வழங்குமாறும் அவர்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதன்போது அங்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடுவதற்கான அனுமதியில்லையென்பதுடன்,  சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடமுடியாதெனக் கூறினர். மேலும், சுலோக அட்டைகளை  தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும்   தடைவிதித்தனர்.

கடந்த 16ஆம் திகதியிலிருந்து  யாழ். மாநகரசபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுவந்த யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள், இன்றையதினம்  (21) ஆளுநர்  அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், 

'யாழ். மாநகரசபையில் 420 இற்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் வேலைப்பகுதி தொழிலாளர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 180 பேர் சுகாதார தொழிலாளர்கள் ஆவர். 

கல்விப் பொது சாதாரண தரத்தில் 6 பாடங்களுக்கான  சித்தியுடன் சுகாதார ஊழியர்களாக தாங்கள்  கடமையாற்றி வருவதாகவும்  தற்போது இதற்கான கல்வித் தகைமையை உயர்த்தியுள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் 100 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் கூறியிருந்தார். இருப்பினும்,  இதுவரையில் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் கூறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--