2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களின் விடயங்களுக்கு யார் பொறுப்புதாரிகள் என்பது முக்கியமானது:ஹக்கீம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

அரசாங்கத்தின் அதிகாரத்தோடு இருக்கின்றபோது முஸ்லிம்களுடைய பல்வேறு விடயங்களுக்கு பொறுப்புதாரிகள் யார் என்கிற விடயம் முக்கியமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பத்தாவது சிரார்த்த தின கத்தமுல் குர்ஆன் வைபவமும் பொதுக் கூட்டமும் நேற்று புதன்கிழமை புத்தளம் ஹூசைனியாபுரம் மீள்குடியேற்றக் கிராமத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர் எம். பிரோஸ்கான் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பொறுப்புதாரிகள் என்று அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டு தேர்தல் காலங்களிலே அரசாங்கத்தின் சார்பிலே வாக்குக் கேட்டவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த உடனேயே அதிலிருந்து தப்பிவிடுவார்கள். உடனே எல்லாப் பொறுப்புக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பார்க்க வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். அவர்களுக்கு அமைச்சரவையிலே வாய்பொத்தி மௌனியாக இருக்கின்ற வழக்கம் தான். இந்த பொறுப்புதாரி என்கிற அந்த அந்தஸ்து ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது முஸ்லிம் காங்கிரஸின் கைகளிலே தான். அதன் மீது சுமத்தப்பட்ட ஒரு விடயமாகத் தான் என்றும் இருந்து வந்திருக்கின்றது.

எமது அடுத்த கட்ட அரசியல் இலேசான ஒரு விடயமல்ல. ஆனால் அதைப்பற்றி எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றீர்கள் என்றும் எமக்குத் தெரியும். அந்த ஆர்வம் நீங்கள் இதுவரை பட்ட அவஸ்தைகளின் ஒரு வெளிப்பாடு என்றும் எமக்குத் தெரியும். ஆனால், பல்வேறு பிரதானமான விடயங்களுக்கு பொறுப்புதாரியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்கிறபோது அதைச் சாதித்துக் கொள்வதற்கு நாங்கள் எல்லா இடங்களிலும் இந்தக் கட்சி சம்பந்தமான இந்தக் கட்சிக்கு இருக்கின்ற அரசியல் அந்தஸ்த்தைத் தான் அதற்குப் பிரயோகிக்க வேண்டும். இதனுடைய பிரயோகவலு என்ன என்பதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய ஆசனங்கள் தான் எமது பிரயோகவலு. அடுத்து வருகின்ற தேர்தல்களிலே வருகிற தேர்தல் முடிவுகள் தான் எங்களுடைய அதிகாரத்தின் வீச்சைத் தீர்மானிக்கும் என்றார்.

இங்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா, முன்னாள் புத்தளம் நகரசபை பிரதித் தலைவர் ஏ.ஓ.அலிக்கான் உட்பட பலரும் உரையாற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--