2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
விடுமுறைகளின் காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகள் கடந்த வாரம் மூன்று தினங்களுக்கு மட்டுமே இடம்பெற்றிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உரிமை பங்குகள் அதிகளவு கடந்த வாரம் கைமாறியிருந்ததை அவதானிக்க முடிந்தது. 
 
கடந்த வியாழக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,976.51 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3309.00 ஆகவும் அமைந்திருந்தன.
 
ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,288,417,974 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 18,300 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 17,659 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 641 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
திங்கட்கிழமை
ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் விலையேற்றத்தின் பங்களிப்புடன் சந்தை நடவடிக்கைகள் நேர்பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. ஆனாலும், கொடுக்கல் வாங்கல்கள் குறைந்தளவிலேயே இடம்பெற்றிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி 233 மில்லியன் ரூபாவாக மாத்திரமே பதிவாகியிருந்தது. ஜுலை மாதம் மத்திய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்தளவான பெறுமதியாகும். செலிங்கோ இன்சூரன்ஸ், லங்கா ஐஓசி மற்றும் சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் மீது அதிகளவு நாட்டம் காணப்பட்டது. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட் ஆகிய பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
செவ்வாய்க்கிழமை
சந்தை நடவடிக்கைகளில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. உரிமை பங்குகள் கைமாறல்கள் ஆரம்பித்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் கொள்வனவில் அதிகளவு வெளிநாட்டவர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதேவேளை டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் விற்பனையிலும் அவர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். லங்கா செரமிக்ஸ் பங்குகளிலும் ஆர்வம் நிலவியதுடன், சிறியளவிலான முதலீட்டாளர்கள் ப்ளு டயமன்ட் மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
வியாழக்கிழமை
விடுமுறைகளால் குறுகிய வாரத்தின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. அமெரிக்காவின் கடன் சிக்கல் நிலை படிப்படியாக நிறைவுக்கும் வரும் நிலையில் மொத்தப்புரள்வு பெறுமதி அரை மில்லியன் பெறுமதியை கடந்திருந்தது. பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் அதிகளவாக உயர் பெறுமதி வாய்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் சிறியளவு முதலீட்டாளர்களின் பங்களிப்பும் இடம்பெற்றிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டதுடன், உரிமை பங்குகள் மீதும், சம்பத் வங்கி மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி பங்குகள் மீதும் அதிகளவு நாட்டம் காணப்பட்டது.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் கலாமசூ, சுவதேஷி, செரன்டிப் லான்ட், பேருவெல வோல்கின் மற்றும் லேக் ஹவுஸ் பிரின். போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
எஸ்எம்பி லீசிங் (சாதாரண), ஜி.எஸ்.ஃபினான்ஸ், என்வி றிசோர்சஸ் (உரிமை), லீ ஹெட்ஜஸ் மற்றும் லங்கா செரமிக் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


 
தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,700 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.53 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 212.52 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--