2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கிராமிய மெய்வல்லுனர்களுக்கு ஜனசக்தி அனுசரணை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் துடிப்பான மற்றும் வளர்ந்து வரும் மெய்வல்லுனர்களுக்கு தொடர்ந்தும் தம் ஆதரவினை வழங்கி வரும் ஜனசக்தி நிறுவனம், தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக கிராமிய மெய்வல்லுனர் அனுசரணை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் ஜனசக்தி, மேலும் 03 இளம் பாடசாலை மெய்வல்லுனர்களுக்கும், 02 டென்னிஸ் வீரர்களுக்கும் அனுசரணை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்திற்கு கிடைத்த பல்வேறு விண்ணப்பங்களிலிருந்து இந்த இளம் வீரர்களின் குறிக்கோள் மற்றும் அவர்களது மெய்வல்லுநர் திறமைகளின் அடிப்படையிலேயே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இளம் மெய்வல்லுனர்களுக்கு மாதாந்த அனுசரணை கொடுப்பனவு மற்றும் தங்கள் தனிப்பட்ட திறமைகளை விருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பு தொகை போன்றன வழங்கப்படுகின்றன. மேலும் மெய்வல்லுனர்கள் வெளிநாடு செல்வதற்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன.

ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் இந் நிதியுதவிகளுக்கு மேலதிகமாக, மெய்வல்லுனர்களுக்கு அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப பயிற்றுனர்கள் மூலம் தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் மற்றும் ஊக்கமூட்டும் பயிற்சிகளையும் வழங்குகிறது. இந்த மெய்வல்லுனர்களின் திறமைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், ஊக்கப்படுத்தும் எண்ணங்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த மெய்வல்லுனர்கள் தத்தமது விளையாட்டு துறையில் மிளிரும் வரை நிலையான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தங்கள் நிறுவனத்தில் முழுநேர பணியாளர்களாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தினூடாக தற்போது 12 பாடசாலை மெய்வல்லுனர்களும், பணியாளர் பிரிவில் 6 பேரும் அனுசரணை பெற்று வருகின்றனர். இதற்கு மேலதிகமாக, தற்போது 2 டென்னிஸ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனசக்தி திட்டங்களுக்கு அமைவாக அனுசரணைகளை பெற்றுக் கொண்டவர்கள் தமக்கு கிடைத்த உதவிகளை வெற்றிகரமாக பயன்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். 

இந்தியாவின் ரந்தி நகரில் இடம்பெற்ற SAARC கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கனிஷ்ட பெண்கள் அணியின் தலைவியாக மீண்டும் சிவந்தி ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். இதன் போது சிவந்தி 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்க விருதையும், 4 x 400 தடை தாண்டல் போட்டியில் தனது 2ஆவது தங்க விருதையும் சுவீகரித்துக் கொண்டார். மேலும் 100m மற்றும் 200m ஓட்டப்போட்டியில் ருமேஷிகா ரத்நாயக்க இரண்டு வெண்கல விருதையும் 100m அஞ்சல் ஓட்டப்போட்டியில் தங்க விருதையும், 100m மற்றும் 200m போட்டிகளில் சமித் லக்மால் வெண்கல விருதையும், 100m ஓட்டப்போட்டியில் தங்க விருதையும் வென்றெடுத்தார். மலின் உதய குமார தடை தாண்டல் போட்டிகளில் வெள்ளி விருதையும், உயரம் பாய்தல் போட்டிகளில் வெண்கல விருதை வென்றதுடன், 400m ஓட்டப்போட்டியில் ஹர்சினி வத்சல தங்க விருதையும் வெற்றியீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன்னர் சீனாவில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட சம்பியன் தொடர் தடை தாண்டல் போட்டிகளில் அகில ரவிசங்க வெள்ளி விருதையும் வென்றெடுத்தார்.

மலேசியாவில் நடைபெற்ற பாடசாலை மெய்வல்லுனர் சம்பியன் போட்டிகளில் ருமேஷிகா ரத்நாயக்க, மெதானி விக்ரமசிங்ச மற்றும் அகில ரவிஷங்க ஆகியோர் பங்குபற்றியதுடன், அதில் அனைவரும் விருதுகளை வென்றெடுத்தனர். மேலும் ருமேஷிகா மற்றும் சமித் ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச கனிஷ்ட சம்பியன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் தேசிய ரீதியான போட்டிகள், சிரேஷ்ட சேர் ஜோன் டார்பட் மற்றும் தேசிய பாடசாலை போட்டிகள் போன்றவற்றில் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இவர்களில் ஒருசில இளம் மெய்வல்லுனர்கள் தேசிய கனிஷ்ட போட்டிகளில் சாதனைகளை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனசக்தி நிறுவனத்தில் பணிபுரியும் சிரேஷ்ட மெய்வல்லுனர்கள் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக நடைபெற்ற வணிக மெய்வல்லுனர் போட்டிகளில் வென்றுள்ளனர்.

'இந்த திட்டத்தின் நோக்கம், இளம் மெய்வல்லுனர்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ஊக்குவிப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கைக்கும் பெருமையையும், கீர்த்தியையும் சேர்க்க முடியும்' என ஜனசக்தி நிறுவனத்தின் நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் பொது முகாமையாளரும், இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு.பர்டல் பின்டோ ஜயவர்தன தெரிவித்தார்.

'இந்த இளம் மெய்வல்லுனர்களின் திறமை வெளிப்பாட்டின் ஊடாக, இலங்கையில் தடகள துறையில் கணிசமான வாய்ப்புகள் நிலவுகின்றன என்பதை காணக்கூடியதாக உள்ளது. இத் திட்டமானது கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்படுகிறது. இத் திட்டத்தினூடாக தேசிய பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய எமது நோக்கத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .