2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பங்குசந்தை நடவடிக்கைகளுக்கான அறிமுகம்-3

A.P.Mathan   / 2011 ஜூன் 19 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குசந்தை நடவடிக்கைகளுக்கான அறிமுகம்-3 (கடந்த வாரத் தொடர்ச்சி...)

பங்குச்சந்தையுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் - Stock Market related Organizations

பங்குச்சந்தையில் முதலீட்டினை ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் குறைந்தது நான்கு அமைப்புக்கள் பற்றி அறிந்து கொள்வதன் ஊடாக இலகுவாக பங்கு வியாபாரம் பற்றி புரிந்து கொள்ள முடியும். கீழ் குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு இலங்கையில் பங்கு வியாபாரமானது வினைத்திறனாக செயற்பட உதவுகின்றன. அதாவது இவ் நான்கு அமைப்புக்களின் செயற்பாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி பங்குப் பரிவர்த்தனை எனப்படும்.

இலங்கை பிணையங்கள் பரிமாற்று ஆணைக்குழு - Security and Exchange Commission of Sri Lanka - SEC

இலங்கையில் பிணைகளின் பரிமாற்றங்களை நெறிப்படுத்தி முகாமை செய்வதனை முதன்மை நோக்காகக் கொண்டு 1987ஆம் ஆண்டு 36ஆம் இலக்க பிணைகள் ஆணைக்குழுச்சபை சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்ட ஆளுமையுடைய அரச துறைசார்ந்த நிறுவனம் ஆகும். இதன் முதன்மை நோக்காக மூலதனச் சந்தைச் செயற்பாடுகளை நியாயமான முறையில் நெறிப்படுத்துதல் ஆகும். இந்த வகையில் முதலீட்டாளர்களின் நஷ்ட அச்சத்தினைக் குறைக்கும் வகையில் நஷ்டஈட்டு நிதியத்தினை ஏற்படுத்துதல், பிணையங்களின் பரிமாற்றங்களை மேற்பார்வை செய்தல் என்பன அமைகின்றன.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை - Colombo Stock Exchange- CSE

இலங்கையில் பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையாகும். இந்நிறுவனம் 1982ஆம் ஆண்டு 17ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் உத்தரவாதத்தால் பொறுப்பு வரையறுக்கப்பட்டதும், இலங்கையில் பிணையங்களின் சந்தையை முறைமைப்படுத்த பிணைகள் பரிமாற்று ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றதுமான ஒர் கம்பனியாகும். இதன் துணைக் கம்பனியாக மத்திய வைப்புத்திட்டக் கம்பனி (Central Deport System) தீர்வகச் செயற்பாடுகளை பொறுப்பேற்று நிறைவேற்றுகின்றது. தற்பொழுது கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது 251 பட்டியல்படுத்தப்பட்ட கம்பனிகளையும், 15 அங்கத்துவ நிறுவனங்களையும், 12 வியாபார அங்கத்துவ நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பட்டியல் படுத்தப்பட்ட கம்பனிகள் - Listed Companies

கம்பனிகள் தமது பகுதியளவிலான உரிமைத்துவத்தை பொதுமக்களிடையே பகிர்ந்து கொள்வதனூடாக மேலதிக நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்கின்றன. இதற்காக கம்பனிகள் தம்மை பட்டியல் விதிமுறைக்கமைவாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியல்படுத்துகின்றன. இத்தகைய கம்பனிகள் பட்டியல்படுத்தப்பட்ட கம்பனிகள் எனப்படும். இலங்கையில் 251 கம்பனிகள் பட்டியல் படுத்தப்பட்ட கம்பனிகளாகக் காணப்படுகின்றன.

பங்குத்தரகர் நிறுவனங்கள் - Stock Brokers

பங்குச்சந்தைப் பிணையங்கள் (பங்குகள், நம்பிக்கை அலகுகள், தொகுதிக்கடன்கள், திறைசேரி உண்டியல்கள் முறிகள்) மீது தமது நிதியினை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரத்தினையுடைய உரிமம் பெற்ற நிறுவனங்கள் பங்குத்தரகர் நிறுவனங்கள் எனப்படும். இலங்கையில் 27 பங்குத்தரகர் நிறுவனங்கள் CSEயின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கைப் பிணைகள் பரிமாற்று ஆணைக்குழுவின் அனுமதிபெற்று செயற்படுகின்றன.

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பங்குத்தரகர் ஊடாக மாத்திரம் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் துணைக் கம்பனியில் கணக்கினை ஆரம்பிப்பதன் ஊடாக பங்கு வியாபாரத்தி;ல் தன்னையும் இணைத்துக்கொள்ள முடியும். இக் கணக்கு மத்திய வைப்புத்திட்ட கணக்கு (CDS Account) எனப்படும்.

சந்தை இடையீட்டாளர்கள் - Market Intermediaries

பங்குச்சந்தை செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் இயங்குவதற்கு வசதியளிக்கின்ற கட்சியினர் சந்தை இடையீட்டாளர்கள் ஆவர்.

  • கடன் தரப்படுத்தல் முகவர்கள்
  • முதலீட்டு முகாமையாளர்கள்
  • எல்லை வழங்குநர்கள்
  • ஒப்புரவாளர்கள்


நம்பிக்கை அலகு - Unit Trusts

இது முதலீட்டு நிதியத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம்பிக்கை அலகுகளை பொது மக்களுக்கு வழங்கித் திரட்டப்படும் முதல் நிதியினைப் பல்வேறுபட்ட முதலீட்டுத் தேக்கங்களில் (Portfolio Investment) முதலீடுசெய்து காத்திரமான முதலீட்டுத் திரும்பல்களை அதன் அலகு உரிமையாளர்களிடையே (Unit Holder) பகிர்ந்தளித்தலைக் கருதும். இங்கு நம்பிக்கை அலகு என்பது முதலீட்டு நிதியத்தின் சம அளவிலான கூறு அல்லது அலகு ஆகும். இந்நிதியம் நம்பிக்கை பொறுப்பு உறுதி (Trust Deed) மூலம் நிர்ணயப்படுத்தப்பட்டு நிதி முகாமைத்துவக் கம்பனியினால் (Fund Management Company) முகாமை செய்யப்படுகின்றது.

நம்பிக்கை அலகுகளின் வகைகள் - Types of Unit Trusts

1) ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்ட வகைப்படுத்தல்.

முதலீட்டு நிதியம் முதலீடுசெய்யப்படும் முதலீட்டுத்தேக்கங்களின் அடிப்படையில் அதாவது ஆபத்துக்களின் (Risk) தன்மைக்கு ஏற்ப வேறுபடுகின்றன. அதாவது மூலதன நிதியம் (Equity Fund), பணச்சந்தை நிதியம் (Money Market Fund) முறி நிதியம் (Bond Fund), மற்றும் சுட்டி நிதியம் (Index Fund) என பொதுவாக வேறுபடுத்த முடியும்.

2) முதிர்வுகாலத்தினை அடிப்படையாகக் கொண்ட வகைப்படுத்தல்.

முதலீட்டு நிதியத்தை முதிர்வுகாலத்தின் அடிப்படையிலும் வேறுபடுத்தி கொள்ளமுடியும். அதாவது நிதி முகாமைத்துவக் கம்பனியினால் நிதியினைத் திரட்டிக்கொள்ளும் நோக்கில் முதிர்வு காலத்தினைக் கொண்டிராத (No Maturity Period) நம்பிக்கை அலகுகள் நடைமுறையில் உள்ள அலகு முதலீட்டாளர்களின் வேண்டுகோளுக்கமைவாக வழங்கப்பட்டுத் திரட்டப்பட்ட நிதியம் திறந்த முடிவுறாத அலகு நிதியம் (Open Ended Fund) எனப்படும். இவை நிதி முகாமைத்துவக் கம்பனிகளினால் குறித்த காலத்தில் மீட்டுக்கொள்ளப்படமாட்டாது. ஆனால் தேறிய சொத்துப் பெறுமதிக்கமைய (Net Asst Value) குறித்த திகதியில் நிலவுகின்ற விலையில் முகாமைத்துவக் கம்பனியிடம் மீளக்கொடுத்துப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் திறந்த முடிவுறாத அலகு நிதியத்தினை பங்குச் சந்தை ஊடாக அலகுகளை வழங்கி திரட்டிக்கொள்ளவோ அல்லது அத்தகைய அலகுகளை பங்குச் சந்தை ஊடாக உரிமை மாற்றம் செய்யவோ முடியாது. மூடப்பட்ட முடிவுடனான அலகு நிதியம் (Closed End Fund) என்பது, முதிர்வு காலத்தினைக் கொண்ட (Maturity Period) நம்பிக்கை அலகுகளை நிதி முகாமைத்துவக் கம்பனிகளினால் நிதியினைத் திரட்டிக்கொள்ளும் நோக்கில் வழங்கப்பட்டு திரட்டப்பட்ட நிதியமானது, மூடப்பட்ட முடிவுடனான அலகு நிதியம் (Closed End Fund) எனப்படும். இங்கு நிதி முகாமைத்துவக் கம்பனிகள் முன் விபரணத்தினை வெளியிட்டு, அதன் ஊடாக பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மூடப்பட்ட அலகுகளை விற்பனை செய்து நிதியத்திற்கான நிதியினைத் திரட்டுகின்றன. அத்தகைய நிதியத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மூடப்பட்ட அலகுகளை கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பரிமாற்றம்செய்ய பட்டியல் விதி அனுமதிக்கின்றது.

பங்குச்சந்தையில் பின்வரும் படிமுறைகளை அறிந்து கொண்டு பங்குத்தரகர்களின் உதவியுடன் பங்குகளை நாம் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். அவையாவன...

எப்படி மத்திய வைப்புத்திட்ட (CDS) கணக்கினை ஆரம்பிக்க முடியும்?

மத்திய வைப்புத்திட்டக் கணக்கு CDS Account

மத்திய வைப்புத் திட்டக் கணக்கானது வங்கிக் கணக்கினைப் போன்று ஆரம்பித்தல் ஒரு இலகுவான நடைமுறையாகும். நாம் பணத்தினை வங்கிபோன்ற நிதி நிறுவனங்களில் வைப்புச்செய்யும் போது எமக்கென பிரத்தியேகமாக ஆரம்பித்துள்ள வங்கிக் கணக்கு ஊடாக அவை சீராக்கம் செய்யப்பட்டு பேணப்படுகின்றது அல்லவா? அதேபோன்று பங்குச் சந்தையி;ல் நாம் பங்குகளில் முதலீடு செய்யும் போது பங்குகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் பிரத்தியேகமாக மத்திய வைப்புத்திட்டக் கணக்கினூடாக சீராக்கம் செய்யப்படுகின்றன. பங்குத்தரகர்களின் உதவியுடன் இலவசமாக CDS கணக்கினை ஆரம்பித்து முதலீட்டினை மேற்கொள்ள முடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட CDS கணக்குகளை ஆரம்பிக்க முடியுமா?

இங்கு முதலீட்டாளர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வேறுபட்ட பங்குத்தரகர் நிறுவனங்களுடாக ஆரம்பித்து கொள்ள வசதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைசார் வல்லுநர்களான பங்குத்தரகர்களிடமிருந்து பெறுமதி மிக்க தகவல்களைத் திரட்டிக்கொள்ள முடிவதுடன் எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் தமக்கு உடைமையாக பிணையங்களின் முதலீட்டு முகாமையினை மற்றவர்கள் உதவியின்றி நிறைவேற்றவும் வழிவகுக்கும்.

பங்குதரகர்களிடம் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் எவை?

பங்குத்தரகர்களுடன் தொடர்பு கொண்டு கணக்கு ஆரம்பித்தல் படிவத்தினைப்பெற்று நிரப்புதல் வேண்டும். இதற்கு பங்குத்தரகரின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முடியும். நிரப்பப்பட்ட படிவத்துடன் உங்கள் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டின் நிழல் பிரதியுடன், உங்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் பொருத்தமான பிரதியினையும் (மின்சாரச்சிட்டை அல்லது தொலைபேசிச் சிட்டை அல்லது கிராம அலுவலர் உறுதிப்படுத்தி வழங்கும் பொருத்தமான பிரதி) இணைத்து வழங்குவதன் ஊடாக ஓர், இரு நாட்களுக்குள் கணக்கினை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.

கணக்கானது தனிப்பட்ட கணக்காக அமையுமாயின் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் போதுமானது. மாறாக கூட்டுக்கணக்கினை ஆரம்பிக்க விரும்பினால் (Joint Account) பொருத்தமான மேலதிக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு இதற்கு மேலாக பிரத்தியேகமான வெளிப்படுத்துகைப் படிவம் மற்றும் பிரதியேகமான வங்கிக் கணக்கினை ஆரம்பித்து பேண வேண்டும். விரும்பினால் வெளிநாட்டவர்கள் உள்நாட்டவர்களையும் இணைத்து கூட்டுக் கணக்கினை ஆரம்பிக்கமுடியும்.

மத்திய வைப்புத்திட்டத்தினால் பிரத்தியேகமாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளாகப் பின்வருவன அமைந்து காணப்படுகின்றன.

1. மத்திய வைப்புத்திட்ட கணக்கு ஆரம்பித்தல் :-

பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பங்குகளைக் கொள்வனவு, விற்பனை செய்ய மத்திய வைப்புத்திட்டத்தில் பங்குத்தரகர்கள் ஊடாக கணக்கினை ஆரம்பிக்க முடியும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஆரம்பித்துப் பேணமுடிவதுடன் அவற்றில் மாற்றங்கள் எற்படுத்த விரும்பினால் பொருத்தமான பங்குத்தரகரூடாக மத்திய வைப்புத் திட்டத்திற்கு அறிவுறுத்தல் வழங்க முடியும். மேலும் பங்குகளின் பரிமாற்றத்தின் போது கொடுக்கல் வாங்கல்களை உறுதிப்படுத்தி ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.

2. பங்குப் பத்திரங்களை பொறுப்பேற்றல்: -

பொதுமக்கள் கம்பனிகளிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொண்ட பங்குப்பத்திரங்களை (Share Certificates) பங்குத்தரகர் ஊடாக மத்திய வைப்புத்திட்டத்தில் வைப்புச்செய்தால் மட்டுமே பங்குச்சந்தையில் நிலவுகின்ற சந்தை விலையில் பங்குகளை விற்பனை செய்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஆதாரமாக மத்திய வைப்புத்திட்டக் கூற்றினைப் பெற்றுக்கொள்வீர்கள். இதில் பிணையங்களின் அளவு மற்றும் விலை வெளிபடுத்தப்படும். இது பொதுவாக வங்கியினால் வழங்கப்படும் வங்கிக்கூற்றினை ஒத்ததாகக் காணப்படும். அவை முதலீட்டாளர்கள் சார்பாக பெற்று தற்காலிகமாக இலத்திரனியல் முறைக்கு மாற்றி பேணுகின்றது. தேவைப்படுமிடத்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ளவும் (Withdrawal) முடியும்.

3. பங்குக்கணக்குகளுக்கிடையே மாற்றம் செய்தல்:-

முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கமைய அவர்களினால் பேணப்படும் பங்குக்கணக்குகள் தொடர்பாக அவர்கள் விரும்பும் பங்குத்தரகர்கள் கணக்குகளுக்கு அவர்களின் பங்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியளவாகவோ மாற்றம் செய்ய முடியும்.

4. தீர்வகச்செயற்பாடுகளைப் பொறுப்பேற்று நிறைவேற்றுதல்:-

பங்குப்பரிமாற்றங்களின் போது அவற்றுக்கான உரிமை மற்றும் பணமாற்றங்களை பொறுப்பேற்று நிறைவேற்றுதல். இங்கு உரிமையானது வியாபாரம் நிறைவுபெற்ற பொழுதே மாற்றப்படும் ஆனால் பணமானது வியாபாரம் நடைபெற்ற நாள் உள்ளடங்கலாக 3 நாட்களுக்குள்(T+3) தீர்க்கப்படும்.

5. முதலீட்டாளர் கோரிக்கைக்கு அமைவாக பங்குகளின் உரிமையானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு உறவு முறை நிரூபிக்கப்படும் பட்சத்தில் அல்லது இறக்கும் சந்தர்ப்பத்ததில் உரியமுறையில் பாதுகாப்பாக மாற்ற முடியும்.

6. முதலீட்டாளர்கள் சார்பாக அவர்களின் நிலையான கட்டளைச் சேவைகளை நிறைவேற்றுதல்:-

முதலீடு செய்த கம்பனிகளினால் வழங்கப்படும் பணம் சார்ந்த மற்றும் பணம் சாராத நன்மைகளாக பங்கிலாபம், பங்குப்பகிர்வு, உரிமை வழங்கல், உபகாரப்பங்கு வழங்கல் போன்றவற்றை பொறுப்பேற்று உரியமுறையில் அவர்களுக்குரித்தான பிரத்தியேகமான கணக்குகளில் உள்வாங்கும் பொறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

(முற்றும்)

தொகுப்பு:-
மு.திலீபன்
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .