2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

விசேட வைப்பு கணக்கு – பண சலவைக்கு வழியேற்படுத்துமா?

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் வதியும் உயர் சொத்துப்புலமை வாய்ந்த இலங்கையர்கள் இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட விசேட வைப்புக் கணக்கில் (SDA) முதலீடு செய்வதற்காக அதிகளவு படையெடுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்பாக பல வங்கியின் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் காணப்படும் கறுப்புப் பணத்தை இலங்கையில் சட்டபூர்வமானதாக மாற்றிக் கொள்ள இந்த கேள்விகள் எதுவும் கேட்கப்படாமல் ஆரம்பிக்க அனுமதியளிக்கப்படும் விசேட வைப்புக் கணக்குகள் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிடக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றனர்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வதியும் இலங்கையர்கள் அல்லது வெளிநாடுகளில் நிரந்தரமாக பணியாற்றும் இலங்கையர்கள் இந்த விசேட வைப்புக் கணக்கில் ஆறு வருடங்களுக்கு அல்லது ஒரு வருடத்துக்கு வைப்புகளை மேற்கொள்ள முடியும் என இலங்கையின் பிரதமர் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். சாதாரண வட்டி வீதங்களுக்கு மேலதிகமாக, இந்த வைப்புகளுக்கு விசேட உயர் வட்டி வீதமும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகக்குறைந்தது ஆறு மாதம் வரை வைப்புச் செய்ய வேண்டிய நிலையான வைப்புக் கணக்காக இந்த விசேட வைப்புக் கணக்கு அமைந்துள்ளதுடன், பெயரிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் இந்த கணக்கில் வைப்புச் செய்ய முடியும். இணைந்த கணக்குகளாகவும் ஆரம்பித்துக் கொள்ள முடியும் என்பதுடன், இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக நாடு இந்த ஆண்டில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், வெளிநாட்டு நாணய நிதி இருப்பை கட்டியெழுப்பிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின், வெளிநாட்டு நாணயமாற்று திணைக்களத்தின் கருத்தின் பிரகாரம், இந்த விசேட வைப்புக் கணக்கு அறிமுகப்படுத்திருந்தமை காரணமாக, நாட்டின் முன்னணி தனியார் வணிக வங்கிகளில் குறிப்பிடத்தக்களவு கணக்கு ஆரம்பிப்பு பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது. சில வங்கிகள் தமது வெளிநாடுகளிலுள்ள வியாபார ஊக்குவிப்பு அதிகாரிகளினூடாக, இந்த கணக்கை அந்நாடுகளில் பிரச்சாரப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அறிந்து கொள்ள முடிந்தது.

அரச வங்கிகளில் பெருமளவு புதிய விசேட வைப்பு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நாட்டினுள் கறுப்புப் பணம் சட்ட ரீதியில் பிரவேசிக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இது அரசாங்கத்தின் ஒரு நோக்காகக் கூட இருக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமைச்சரவை பேச்சாளர் அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில், இந்த விசேட வைப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு எவ்விதமான கேள்விகளும் வைப்பாளர்களிடமிருந்து கேட்கப்படாது, இந்த கணக்கின் மீது வரி எதுவும் அறவிடப்படாது, வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற விதிமுறைகளிலிருந்து விலக்கழிக்கப்பட்டதாக இந்த கணக்கு அமைந்திருக்கும் அத்துடன் வழமையான வெளிநாட்டு நாணய சேமிப்பு வைப்புகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுவதாயின், இந்த கணக்குக்கு விசேடமாக 6 சதவீத வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வணிக வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளும் பொறிமுறையை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தனர். பணச் சலவை (Anti Money Laundering) தவிர்ப்பு செயற்பாடுகளில் வங்கிகள் நேரடியாக ஈடுபடுவதால் இந்த முற்காப்பு செயற்பாடுகளை தாம் பின்தொடர்வதாக சிரேஷ்ட வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உதாரணமாக, இவ்வாறான முறையான ஆய்வொன்று மேற்கொள்ளும் திட்டமில்லாவிடின், நாட்டினுள் சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிதிகளும், சட்டபூர்வமாக பிரவேசிக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

விசேட வைப்புக் கணக்கை ஆரம்பிக்கும் போது தமது வங்கி அவசியமான சகல கவனிப்புகளையும் மேற்கொள்வதாக முன்னணி வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் நாம் பின்பற்ற வேண்டிய சகல செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம். அவ்வாறு  நாம் முறையான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், வெளிநாட்டு வங்கிகளுடன் பேணும் கணக்குகளை இழக்க நேரிடும். உள்நாட்டு நாணயத்தை அனுப்பி பெற்றுக் கொள்வதற்கு இந்த வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் எமக்கு அத்தியாவசியமானதாகும். தமது நாட்டு எல்லைகளுக்கு அப்பால் நாணயத்தை பேணுவதற்கு வங்கிக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

அரச வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை வைப்புச் செய்வது பற்றிய கோரிக்கைகளும் எமக்கு கிடைத்திருந்தன. இவை சிறந்த நிதிப் பின்புலத்தைக் கொண்ட வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்திருந்தது. ஆனாலும், வெளிநாடுகளில் வசிக்கும் சில இலங்கையர்களிடமிருந்து எமக்கு இந்த கணக்கை ஆரம்பித்து சில வாரங்களில் அதில் 60 சதவீதமான தொகையை வேறு கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ள முடியுமா போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் கோரிக்கைகளும் எமக்கு கிடைத்திருந்தன. இவ்வாறான கோரிக்கைகளை நாம் ஏற்கவில்லை.

வெளிநாட்டு வங்கியொன்றிலிருக்கும் கணக்கிலிருந்து இந்த கணக்கை ஆரம்பிப்பதற்கான பணத்தை அனுப்ப வேண்டியுள்ளது. எனவே, தமக்கு கிடைக்கும் பணம் பெரும்பாலும் வாடிக்கையாளரின் தன்மையை உறுதி செய்த நிலையில் கிடைப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதன் காரணமாக நிதி மோசடி தொடர்பில் தாம் அதிகளவு அச்சம் கொள்ளவில்லை எனவும் கூறினர்.

எவ்வாறாயினும், சர்வதேச ரீதியில் கறுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிதித் தாபனங்களிலிக்கும் கணக்குகளிலிருந்து பணத்தை அனுப்புவதற்கான கோரிக்கை எழுந்தால் அவற்றை எவ்வாறு கையாள்வது என கேட்டபோது, சிலர் தமக்கு எவ்விதமான கோரிக்கைகளும் இதுவரையில் எழவில்லை எனவும், சிலர் எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை.

உயர் பணச் சலவை (Money laundering) வாய்ப்புகள் நிறைந்த மூன்றாம் தரப்பு நாடுகள் நிரலிலிருந்து இலங்கையின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது. சர்வதேச விதிமுறைகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்திருந்த சீராக்கல் நடவடிக்கைகளை தொடர்ந்து இலங்கையின் பெயர் அந்தப் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விசேட சேமிப்பு வைப்பு கணக்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் நிலவும் தெளிவற்ற சட்டபூர்வ அறிவுறுத்தல்கள் காரணமாக, இலங்கையின் பணச் சலவை (Money laundering) தொடர்பான நிலைப்பாட்டுக்கு மீண்டும் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--