2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

கொவிட் - 19 காரணமாக ரூ. 30 பில்லியன் வருமானம் இழப்பு

ச. சந்திரசேகர்   / 2020 ஜூலை 26 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வருமானம், நடப்பு நிதியாண்டின் நிறைவில் 30 பில்லியன் ரூபாயை இழக்கும் என, ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 7 சதவீத வீழ்ச்சியெனவும் தெரிவித்துள்ளது. நாட்டின் மாபெரும் இரு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களையும் இந்த நிறுவனப்பட்டியலிலிருந்து நீக்கும் பட்சத்தில், இந்த வருமான இழப்பு ரூ. 40 பில்லியனை விட அதிகமாகப் பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களைத் தெரிவு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டு இருந்ததுடன், இதில் பெருமளவான நிறுவனங்களின் நிதி எதிர்வுகூறல்கள் மறைப் பெறுமதியில் அமைந்திருந்தன.

இதன் காரணமாக இந்த நிறுவனங்களுக்கு ஃபிட்ச் வழங்கியுள்ள தரப்படுத்தல்கள் மேலும் குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்படுவதை விட வேகமாக மீட்சியடையும் பட்சத்தில் எதிர்வுகூறல்களை நிலையான தன்மைக்கு மாற்றுவதற்கு வழியேற்படக்கூடும்.

ஹோட்டல் துறை பாரியளவு வீழ்ச்சியைg; பதிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படும் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 75 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் எனவும் ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மீள ஆரம்பித்துள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மீள ஆரம்பிக்கும் வரையில் எவ்விதமான வருமான அதிகரிப்பையும் இந்தத் துறையில் எதிர்பார்க்க முடியாது.

ஹோட்டல் துறை பரந்தளவு பொருளா தாரத்தில் தொழில் வாய்ப்பு களை கொண்டு ள்ளது.
இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் பாவனைப் பொருட்கள் பிரிவு வருமான வீழ்ச்சியை பதிவு செய்யும் என ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளது. இந்தத் துறை மொத்த வருமான இழப்பில் 30 சதவீத பங்களிப்பைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முடக்கநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பிரிவில் கேள்வி அதிகரித்த போதிலும், நுகர்வோரின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள தாக்க நிலைமைகள் காரணமாக இவற்றுக்கான கேள்வி வீழ்ச்சியடைவதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

தொலைத்தொடர்பாடல் மற்றும் மருந்துப்பொருட்கள் விநியோகம் மற்றும் உற்பத்தித் துறைகள் முடக்கநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறுதியான வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) மற்றும் உணவு, பானங்கள் போன்றன துரித கதியில் மீட்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

முடக்க நிலைக்கு பின்னரான இலங்கையின் கூட்டாண்மை நிறுவனங்களின் எதிர்வுகூறல்கள் எனும் தலைப்பில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டிருந்த ஆய்வு அறிக்கையில் மேற்படித் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--