2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

உதவி செய்ய இலகுவாகவே அமைச்சுகள் மீள பெறப்பட்டன

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலமைச்சர் நிதியத்தின் ஊடாக உதவி செய்ய இலகுவாகவே அமைச்சுகள் மீள பெறப்பட்டன என வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரினால் சுகாதார அமைச்சரிடம் மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த புனர்வாழ்வு, சமூக சேவைகள், மகளிர் விவகார அமைச்சுகள் கடந்த வாரம் மீள் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக முதலமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் உள்ள முரண்பாடுகள் மற்றும் தாண்டிக்குளம் பொருளாதார மையம் அமைப்பதில் ஏற்பட்ட கருத்தியில் வேறுபாடுகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக ஊடக அறிக்கை மூலம் சுகாதார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மொத்தமாக 05 அமைச்சுக்களே ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலமைச்சரின் அமைச்சிற்கு மேலதிகமாக 04 அமைச்சுக்கள் இயங்குகின்றன.

அதாவது சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, மீன்பிடி அமைச்சு ஆகியனவாகும். எனினும் இந்த அமைச்சுகளுக்கு மேலதிகமாக வேறுபட்ட திணைக்களங்கள் அந்தந்த அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் இயங்கிய சிறுவர் நன்னடத்தை திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களமும் அதனோடிணைந்த புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார பிரிவுகள் அடங்கலாக மேலதிகமாக 02 திணைக்களங்கள் கடந்த வருடம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டடிருந்தன.

தற்போது முதலமைச்சர் நிதியம் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளநிலையில் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வுப்பணிகளை முன்னெடுக்கும் முகமாக முதலமைச்சர் அவர்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் சமூக சேவைகள் திணைக்களமும் அதனோடு இணைந்த மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பிரிவுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 09.05.2016இல் நடைபெற்ற அமைச்சர் வாரியத்தில் முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட பிரேரணையின் அடிப்படையிலேயே இவ்வாறு திணைக்களம் மீள்பெறப்பட்டுள்ளது.

இது வழமையான நிர்வாக நடவடிக்கையே தவிர வேறெதுவும் இல்லை. எனினும் அண்மைக்காலமாக சில ஊடகங்களில் இதை வேறு விடயங்களுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவருவதானது வருத்தமளிப்பதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .