2020 நவம்பர் 28, சனிக்கிழமை

‘குறைபாடுகளைக் கேட்டறிவதற்கு அதிகாரிகள் வருகை தரவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பாடசாலையின் குறைபாடுகளைக் கேட்டறிவதற்கு துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள் வருகை தரவில்லையென, பெற்றோர்களால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பெற்றோர்களுடன் நேரடியாக சந்திப்புகளை நடத்துங்களென, வலயக் கல்விப் பணிமனையில் நேரிலும் கடித மூலமும் பெற்றோர்களால் அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும் துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையின் வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஒருவருமே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு வருகை தரவில்லை.

இதன் காரணமாக, பாடசாலையின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்க முடியாது உள்ளதாகவும் 1925ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வலயக் கல்விப் பணிமனை அசமந்தப் போக்குடன் செயற்படுவதாகவும் பெற்றோர்களால் தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற இரு மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நட்டாங்கண்டல் பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட போதிலும், பாடசாலைக்குச் செல்வோம் என கூட்டத்தில் தெரிவித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் கூட பாடசாலைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--